சென்னை: தாம்பரம் அடுத்த ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்டப் பகுதிகளில் 3 அரசு மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த அரசு மதுபானக்கடையில் பாண்டியன் என்பவர் அனுமதி பெற்று பார் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 12 மணியளவில் பாண்டியன் என்பவர் நடத்தி வரும் மதுபானக்கடைக்குச் சென்ற இளைஞர் தகராறில் ஈடுபட்டு, நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பிச்சென்றுள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக கடையில் இருந்த ஊழியர்களுக்கு எந்த ஒரு காயமும் இன்றி உயிர் தப்பினர். நாட்டு வெடிகுண்டு வீசிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் வெடிகுண்டு வீசிய நபரை தற்போது கைது செய்து விசாரணை செய்ததில், கடந்த வாரம் மதுபானக்கடையில் இருந்த நாய்க்குட்டியை துன்புறுத்தியபோது, அதனைக் கண்ட பார் ஊழியர்கள் தன்னை கடுமையாகத் திட்டியதாகவும், அதே போல் நேற்று அதே மதுபானக்கடையில் இரவு மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் செல்ல முயன்ற போது சேற்றில் சிக்கியதாகவும்; வாகனத்தை எடுப்பதற்கு உதவி கேட்டபோது பார் ஊழியர்கள் வர மறுத்ததால் இந்தச்சம்பவங்களுக்கு பழிவாங்கும் நோக்கத்தில் வெடிகுண்டு வீசியதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:Video...போதையில் உணவக உரிமையாளரைத் தாக்கிய வழக்கறிஞர்கள் கைது