பாமக சார்பில் தயாரிக்கப்பட்ட வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை, சென்னை தியாகராயநகரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ராமதாஸ், 'காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க முதலமைச்சர் பழனிசாமி முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது. மத்திய அரசு அறிவித்துள்ள 16 அம்ச வேளாண்மைத் திட்டத்தில் எட்டுத் திட்டங்கள் பாமக வலியுறுத்தியவை' என்று தெரிவித்தார்.
மேலும் மாநில அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு கட்டாயம் இல்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது இல்லை, கட்டாயமாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், அவர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாட்டில் வருமான வரித்துறையினர் மேற்கொள்ளும் சோதனை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ராமதாஸ், 'அவர்களது வேலையை செய்கிறார்கள், அதில் தான் கருத்துக் கூற எதுவும் இல்லை' என்றார்.
இதையும் படிங்க: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வழக்கு: தமிழ்நாடு அரசு, டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவு