சென்னை: மனித நாகரீகமான வாழ்க்கையில் தொழிநுட்பத்தினால் ஏற்பட்ட வளர்ச்சி என்பது மிக பெரியது. தொழிநுட்பத்தை முறையாக பயன்படுத்தினால் உள்ளங்கையில் அனைத்து வேலைகளை செய்யும் அளவிற்கு தொழிநுட்பம் வளர்ந்துள்ளது. ஒரு காலத்தில் ஒரு முகவரிக்கு செல்வதற்கு ஆங்காங்கே கேட்டு செல்ல வேண்டிய நிலைமை இருந்தது. ஆனால் தற்போது நமது மொபைலில் உள்ள செயலியை பயன்படுத்தி நாம் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு விரைந்து சென்றுவிடலாம்.
அந்த வகையில் இந்த தொழிநுட்பத்தை பயன்படுத்தி சென்னையில் பெருநகர போக்குவரத்துக் கழகம் சார்பாக 'சென்னை பேருந்து செயலி' ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பேருந்துகளின் இருப்பிடம் மற்றும் நிகழ்நேர அடிப்படையில் வழங்கும் 'சென்னை பேருந்து' மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை முழுவதும் 3,233 பெருநகர போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்தை இருப்பிட கண்காணிப்பு சாதனங்களுடன் கண்காணிக்கவும் இந்த ஆப் மக்களுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேருந்துகள் 602 வழித்தடங்கள் வழியாக இயக்கப்பட்டு, 6,026 பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தப்படுகின்றன. தினமும் சுமார் 25 லட்சம் பேர் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.
கடந்த மே 4ஆம் தேதி 'சென்னை பேருந்து' மொபைல் செயலியை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது , “இதைப் பயன்படுத்தி, பயணிகள் ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் உள்ள அனைத்து எம்டிசி பேருந்துகளின் நேரலை இருப்பிடம், பேருந்துகள் வரும் நேரம் மற்றும் அருகிலுள்ள பேருந்து நிறுத்தங்கள் ஆகியவற்றைக் கண்டறிய முடியும்” என தெரிவித்தார்.
செயலி செயல்படும் விதம்: இதில் பயனர் 'பஸ் ரூட்' விருப்பத்தை கிளிக் செய்து, வழித்தட எண்ணை உள்ளிடும்போது, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் திரையில் காட்டப்படும். இரண்டு இடங்களுக்கு இடையே ஓடும் பேருந்துகளின் இருப்பிடத்தைக் காண, பயனர் பாதை விருப்பத்தை கிளிக் செய்து, பேருந்து வரும் நேரத்தை அறிந்து கொள்ளலாம்.
அவசரநிலை ஏற்பட்டால், பயணிகள் தங்கள் தொடர்புகளுக்கு அல்லது காவல்துறை அதிகாரிகளுக்கு பேருந்தின் செயலி மூலம் செய்திகளை அனுப்பலாம். பயணிகளை தொடர்பு கொள்ள பயனர் எண்ணுக்கு ஒரு செய்தியை செயலி அனுப்புகிறது. பயணிகளை எளிதாக அணுகுவதற்கு மொபைல் செயலி மூலம் திரையின் மேல் வலது மூலையில் SOS பட்டன் வைக்கப்பட்டுள்ளது.
செயலியின் முகப்புத் திரையில் ஒரு கிமீ சுற்றளவில் உள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களின் பெயர்களையும் தெரிந்து கொள்ளலாம். 'டிரிப் பிளானர்' அம்சத்தைப் பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் இலக்கை அடைய ஒரு பேருந்தின் வழித்தட எண்களை அறிந்து கொள்ளலாம்.
‘எங்களை தொடர்பு கொள்ளுங்கள்’ என்ற விருப்பத்தில் புகார் எண்கள் மற்றும் 31 பேருந்து டிப்போ கிளை மேலாளர்களை தொடர்புகொள்ள எண்கள் இருக்கின்றன. ‘சென்னை பஸ்’ செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என தமிழ்நாடுஅரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நம்மிடையே பேசிய சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர் அன்பு ஆப்ரகாம்,"இந்த செயலியை இதுவரை 76000க்கும் மேற்பட்ட பயணிகள் பதிவிறக்கம் செய்துள்ளனர். பயணிகளிடையே செயலி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பொதுமக்களிடம் ஒருசில கருத்துக்களும் வருகின்றது. அதற்கு ஏற்றவாறு இனிவரும் காலங்களில் செயலியில் மாற்றம் கொண்டுவர முயற்சி செய்கின்றோம். மேலும் இந்த செயலியை அதிகளவு பதிவிறக்கம் செய்வார்கள் என எதிர்பார்கிறோம்" என கூறினார்.
சென்னை போன்ற பெருநகரங்களில் வாழும் மக்கள் தினசரி வாழ்க்கையில் நேரம் இல்லாமல் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இது போன்ற செயலி மக்களின் நேரத்தை சேமிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
இதையும் படிங்க: வெளிச்சத்திற்கு வராத பல ஜெய்பீம் கதைகள்; போலீசாரின் சித்ரவதைக்குத் தொடர்ந்து ஆளாகும் வேதனை நிறைந்த ஆதிப்பழங்குடியின சமூகம்!