மத்திய அரசால் மாநிலத்திற்கு வழங்கப்படும் பொது விநியோகத் திட்ட மண்ணெண்ணெய் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. எனவே குடும்ப அட்டைகளுக்கான மண்ணெண்ணெய் அளவு குறித்து விளம்பரப்படுத்த வேண்டுமென உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர், அனைத்து மண்டல நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "மத்திய அரசால் மாநிலத்திற்கு வழங்கப்படும் பொது விநியோகத் திட்ட மண்ணெண்ணெய் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. தற்போது மாநிலத்தின் மொத்த தேவையில் 20 விழுக்காடு மட்டுமே ஒதுக்கீடாக பெறப்பட்டுள்ளது.மத்திய அரசால் மாநிலத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டு அளவின்படி, அனைத்து மாவட்டத்திற்கும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மண்ணெண்ணெய் வழங்கல் அளவு குறித்து குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து புகார்கள் பெறப்படுவதை தவிர்க்கும் பொருட்டு, தங்கள் மாவட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில், மண்ணெண்ணெய் பெறத் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கான மண்ணெண்ணெய் வழங்கல் அளவு குறித்து அனைத்து நியாய விலைக்கடைகளிலும், மண்ணெண்ணெய் வழங்கு நிலையங்களிலும் குடும்ப அட்டைதாரர்கள் அறியும் வண்ணம் விளம்பரப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.