சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக 2019ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி முதல் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. தேர்வுகளும் நடத்தப்பட்டும் வந்தன.
இந்நிலையில் தற்போது கரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால், பல கட்டங்களாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மெல்ல மெல்லத் தளர்த்தப்பட்டும், அதே சமயம் பள்ளிகள் திறக்கப்பட்டும் வருகிறது.
மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
அந்த வகையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்பது முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் இன்று (நவ.01) சுமார் 600 நாள்களுக்குப் பின்னர் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.
பள்ளி வகுப்பறையில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டு மாணவர்கள் வகுப்பறையில் அமர வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்கு வந்த மாணவர்களை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் மாணவர்களுக்கு புத்தகங்களையும் எழுது பொருள்களையும் அவர் வழங்கினார்.
மகிழ்ச்சியுடன் வருகை
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், “கரோனா தொற்று குறைந்துள்ளதால் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்குவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிக்கு வரும் மாணவர்களை பூங்கொத்து கொடுத்து மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். மாணவர்களும் பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் வருகை புரிந்துள்ளனர். பள்ளி திறக்கப்பட்ட பின்னர் வருகைபுரிந்த மாணவர்களை வரவேற்பதில் மாணவர்களுக்கு இருக்கும் மகிழ்ச்சி எனக்கும் இருக்கிறது.
பள்ளிக்கு வருகை புரிந்த மாணவர்கள் தங்களின் நண்பர்களை நேரிடையாக பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். மேலும் நேரடி வகுப்பில் நன்றாக பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்” என்றார்.
பெற்றோர் நம்பிக்கை
அதனைத் தொடர்ந்து பேசிய மாணவர்களின் பெற்றோர் “பள்ளிகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு ஆசிரியர்களை நம்பி அனுப்புகிறோம்” எனத் தெரிவித்தனர்.
பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றாலும் தொடர்ந்து பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதே கல்வியாளர்களின் எண்ணமாக இருக்கிறது.
இதையும் படிங்க: பள்ளிகளுக்கு விடுமுறை: மகிழ்ச்சியில் மாணவர்கள்