சென்னை: தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இயந்திரப் படகில் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி அதிகாலையில் கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் 10 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மேலும் அவர்கள் மீது எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் குற்றம் சுமத்தி, அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள், வலைகள் மற்றும் இயந்திர படகு ஆகியவற்றையும் பறிமுதல் செய்து, இலங்கைக்குக் கொண்டு சென்றனர். அதன் பின்னர் தமிழக மீனவர்கள் 10 பேரும் இலங்கை நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் நாகப்பட்டினம் மீனவர்களின் குடும்பத்தினர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தகவலறிந்து, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதி தமிழ்நாட்டு மீனவர்களை உடனடியாக, இலங்கை சிறையிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரினார். இதையடுத்து இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி இலங்கை நீதிமன்றம் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மீனவர்கள் 10 பேரையும் சிறையிலிருந்து விடுவித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. மேலும் இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களை தங்களுடைய பராமரிப்பில் வைத்துக்கொண்ட இந்திய தூதரக அதிகாரிகள் மீனவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தினர்.
அதோடு மீனவர்களைத் தமிழ்நாட்டுக்கு விமானம் மூலம் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளையும் விரைந்து செய்தனர். ஆனால் மீனவர்கள் 10 பேருக்கும், பாஸ்போர்ட் விசா என எதுவும் இல்லாத காரணத்தால் அனைவருக்கும் இந்தியத் தூதரக அதிகாரிகளால் எமர்ஜென்சி சான்றிதழ் (emergency certificate) வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மீனவர்களுக்கு விமான டிக்கெட் ஏற்பாடுகளையும் இந்திய தூதரகம் செய்து கொடுத்தது.
இந்த நிலையில் இன்று காலை இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து, சென்னைக்கு வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 10 மீனவர்களும் சென்னைக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். பின் சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்றனர். அதோடு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் 10 மீனவர்களும், அவர்களின் சொந்த ஊரான நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்திற்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: மழை வேண்டி பிரார்த்தனை... ஊரே தீர்த்தக்குடம் எடுத்து வேண்டுதல்!