அரசு புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள, இந்த அரசாணையை ரத்துசெய்யக் கோரி ராதா கிருஷ்ணன், சத்தியநாராயணன் ஆகிய இருவர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஸ், கிருஷ்ன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்களில், 600 ஏக்கர் நிலங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட இருப்பதாகவும், அந்த நிலங்கள் ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அத்திட்டத்திற்காக 0.1 விழுக்காடு கோயில் நிலம் மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதால் அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து அரசின் பதில் மனுவுக்குப் பதிலளிக்க மனுதாரர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை மார்ச் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: மீனவர்களுக்கு எடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகள் என்ன? விளக்கமளிக்க மீன்வளத் துறை இயக்குநர் நேரில் ஆஜராக உத்தரவு!