சென்னை: தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த கே.பி.சௌத்ரி பட்டப்படிப்பை முடித்து விட்டு புனேவில் பணி செய்து வந்துள்ளார். அதன் பிறகு அந்த வேலையை விட்டுவிட்டு சினிமா மீது உள்ள ஆசையால் திரைப்படங்களைத் தயாரித்து வந்துள்ளார். மேலும் படங்களை விநியோகம் செய்தும் வந்துள்ளார்.
ரஜினிகாந்த் நடித்து 2016ஆம் ஆண்டில் வெளியான கபாலி படத்தைத் தெலுங்கில் விநியோகம் செய்துள்ளார். அது மட்டுமின்றி அதர்வா நடித்த கணிதன் படத்தையும் விநியோகம் செய்துள்ளார். மேலும் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான பவன் கல்யாண் நடித்த கப்பார் சிங் , மகேஷ் பாபு படம் என பல படங்களுக்கு விநியோகஸ்தராக இருந்துள்ளார். கே.பி.சௌத்ரி விநியோகஸ்தராக வெற்றிநடை போட்ட காலத்தில் முன்னணி நடிகர்களுடன் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. திடீரென இவர் தயாரித்த படங்கள் போதிய வெற்றியைப் பெறாததால் கோவா சென்று செட்டில் ஆகிவிட்டார்.
அங்கு கிளப் ஒன்றை நடத்தி வந்த அவர் சமீபத்தில் தொழில் முறை பயணமாக ஹைதராபாத் வந்துள்ளார். இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள இவரது வீட்டில் வைத்துச் சிறப்பு புலனாய்வு குழு சௌத்ரியை கைது செய்துள்ளனர். மேலும் 90 பைகளிலிருந்த 82 கிலோ மதிப்புள்ள போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
போலீஸ் விசாரணையின்படி அவர் கோவாவில் இருக்கும் போது அங்கு 100 பைகளில் போதைப் பொருள்களை வாங்கியுள்ளார். ஆனால் 90 பைகள் மட்டுமே தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்குப் போதைப் பொருள்களை சப்ளை செய்யக் கிளம்பிய போது சௌத்ரி கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி கடந்த 2021ஆம் ஆண்டு பல தெலுங்கு சினிமா பிரபலங்கள் போதைப் பொருளுக்காக சௌத்ரியை தொடர்பு கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2017ஆம் ஆண்டு போதைப் பொருள் வழக்கில் தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத், நடிகை ரகுல் பிரீத்தி சிங், சார்மி, ரவி தேஜா, ராணா டகுபதி உள்ளிட்ட 12 பிரபலங்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தெலுங்கு சினிமா உலகை அதிரவைத்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சினிமா பிரபலங்கள் சிக்குவது தொடர் கதையாகி வருவது, மக்கள் மத்தியில் சினிமா பிரபலங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Senthil Balaji Live Update: செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்றக் காவல்!