17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "வரும் 23ஆம் தேதி இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட வேண்டிய மாற்றம் நிகழவுள்ளது. மக்களுடைய நாடியை பிடித்து பார்த்து சொல்கிறேன் இந்த ஆட்சி மோடி இல்லாத ஆட்சியாகத்தான் அமையும்.
வாக்குச்சாவடிகளில் நமது தோழர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். மோடி எந்த தவறான காரியத்திலும் இறங்குவார். அதிகார பலத்தை வைத்து தான் மோடி பாஜகவில் இருக்கிறார். மோடி, அமித்ஷா தேர்தல் நடவடிக்கைகள் சரியில்லை என்று தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தெளிவாக சொல்லி இருக்கிறார். ஆனால், அவரது கருத்தை தேர்தல் ஆணையம் பதிவு செய்யவில்லை. மே 23ஆம் தேதி நடக்கவிருக்கும் எதிர்கட்சிகளின் கூட்டத்தை திசைதிருப்பவே கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருமாவளவன் காந்தியை தீவிரவாதி என்று கூறினார். நான் அவர் கூறியதை முழுமையாக படித்தேன். நானும் பலமுறை கூறியிருக்கிறேன் காந்தி தன்னை ஒரு தீவிரமான இந்து என்று சொல்லிக் கொள்பவர். ராமர் வழி பின்பற்றுபவர். ஆனால் அவருடைய மத நம்பிக்கையை அடுத்த வீட்டில் திணிக்க மாட்டார். மதச்சார்பற்ற ஆட்சியை உருவாக்கவே காந்தி பாடுபட்டார். இங்கு தான் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும், அவருக்கும் வித்தியாசம் இருக்கிறது" என அவர் தெரிவித்தார்.