சில்லறை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குத் தங்களது தொழிலை நவீனமயமாக்கி, தேவையற்ற மற்றும் சலிப்பு தரும் நடவடிக்கைகளில் நேர விரயத்தைத் தவிர்த்து, முழுக்க முழுக்க இணைய வழியில் நடத்துவதற்கான இஆர்பி மென்பொருள் தயாரித்து வழங்கும் நிறுவனம் கோஃபிரூகல்.
சில்லறை வணிகம், உணவு வணிகம் மற்றும் சில்லறைப் பொருட்கள் விநியோக வணிகம் ஆகிய மூன்றிலும் கவனம் செலுத்தும் இந்நிறுவனம், தனது சேவையை மேலும் விரிவுபடுத்தும் வகையில் மூன்று புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த வகையில், மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட், மருந்துக்கடை, மின்னணுப் பொருட்கள், ஆடை, அணிகலன், புத்தகம், விளையாட்டுச் சாதனங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு 'ரீட்டைல் ஈசி' எனும் பல்வேறு மென்பொருட்களை உள்ளடக்கிய தொகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
உணவகங்கள், பேக்கரி, ஐஸ்கிரீம், கிளைவுட் கிச்சன் உள்ளிட்ட உணவு சார்ந்து பல்வேறு தளங்களில் இயங்கும் நிறுவனங்களின் வசதிக்காக 'செர்வ் ஈசி' எனும் சாஃப்ட்வேர் பண்டல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வேகமாக விற்பனையாகும் நுகர்வுப் பொருட்கள், எண்ணெய், விவசாயப் பொருட்கள் உள்ளிட்டவற்றை விநியோகம் செய்யும் நிறுவனங்களின் தேவைக்காக 'மேனேஜ் ஈசி' எனும் தயாரிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இது தவிர முற்றிலும் மனிதர்கள் இல்லாமல் நடத்தப்படும் சூப்பர் மார்கெட்டிற்கான மாதிரியையும் கோஃபிரூகல் நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது. அதில், கடைக்கு சரக்கு இருப்பு வைப்பது, வாடிக்கையாளர்களின் பொருட்களை வாங்குவது, காலியான சரக்குகளை மீண்டும் ஆர்டர் செய்வது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் இயந்திரமயமாக்கியுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள நடைமுறையை தற்போது இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது இந்நிறுவனம். மனிதர்களின் வேலையைக் குறைத்து, மனிதனின் மூலையை இயந்திரத்தால் செயல்படுத்தி வருகிறது.
அதேபோல் சிறு, குறு உணவகங்களும் தங்களுக்கேற்ற பிரத்யேக செயலியை உருவாக்கி கொள்ளும் டிஜி கிச்சன் சேவையும் இந்நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இதன்மூலம் மாதம் வெறும் 500 ரூபாய்க்கு கூட சிறு உணவங்கள் வைத்திருப்பவர்கள் தங்களுக்கேற்ற வகையில், கிளவுடு சேவை மூலம் பிரத்யேக தயாரிப்புகளைப் பெற முடியும்.
சிறு நிறுவனங்கள் பெரிய அளவில் வளரத் தேவையான எல்லா விதமான தொழில் நுட்ப உதவிகளையும், தயாரிப்புகளையும் கடந்த 15 ஆண்டு கால அனுபவத்தைக் கொண்டு தயாரித்துள்ளது கோஃபிரூகல் நிறுவனம்.
இது தொடர்பாக பேசிய கோஃபிரூகல் நிறுவனத் தலைமை செயல் அலுவலர் குமார் வேம்பு, "சில்லறை வணிகம், உணவு வணிகம் மற்றும் சில்லறைப் பொருட்கள் விநியோக வணிகத்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு இஆர்பி மென்பொருள் தயாரித்து வழங்கி வருகிறோம்.
சில்லறை வணிகத்தில் உள்ள நிறுவனங்கள் தற்போது அதிகளவில் போட்டியைச் சந்தித்து வருகின்றனர். சந்தையில் சவால்கள் நிறைய உள்ளன. இதற்குத் தீர்வு காணும் வகையில், முழுக்க முழுக்க தொழில்நுட்ப ரீதியிலான சேவைகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் குறைந்த ஊழியர்களைக் கொண்டே கடையை நடத்த முடியும்.
அதிகம் படிக்காத தொழிலாளர்கள் இந்த தொழில்நுட்பங்களை தாங்களாகவே கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 70 நாடுகளில் 30 ஆயிரம் வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள எங்கள் நிறுவனம் சூப்பர் மார்கெட், துணிக்கடை, புட் டிரக், ஃபைன் டைன், டார்க் கிச்சன், கிளவுடு கிச்சன் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை செய்து வருகிறோம்.
விநியோகஸ்தர்கள் ஒட்டுமொத்தமாக வணிகத்தை எளிமைப்படுத்தி, தேவையற்ற நேர விரயத்தைப் போக்கி தொழில்கள் வளர உதவி செய்கிறோம்.
70 வித்தியாசமான தொழில்களுக்குத் தேவையான தொழில் நுட்ப உதவி செய்து வருகிறோம். செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் போன்ற அதி நவீன தொழில்நுட்பங்களை சாதாரண கடைகளில் பயன்படுத்துகிறோம். தற்போது வளர்ச்சி குறைந்துள்ளதே தவிர வளர்ச்சி இல்லாமல் இல்லை.
வியாபாரம் அதே அளவில்தான் உள்ளது. இதுபோன்ற நேரங்களில் தான் வணிகர்கள் செலவைக் குறைப்பது, தொழிலை எவ்வாறு வளர்ப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிப்பதால் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது" என்றார்.