சென்னை: திமுக தேர்தலின்போது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதாக சென்னையில் ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆட்சியின்போது, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் இன்று (ஜூலை 28) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தால் சிபிஎஸை எடுத்துவிட்டு, சிபிஎஃப்பை கொண்டுவருவோம் என்று உறுதியளித்ததாகவும்; ஆனால், அவற்றையெல்லாம் மறந்துவிட்டு இந்த இரண்டரை ஆண்டுகால திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களையோ, எந்த ஆசிரியர் சங்கத்தினரையோ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இது குறித்து முதலமைச்சர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், 'ஊடகங்கள் வழியாக இவற்றையெல்லாம் கண்டுகொண்டிருக்கும் முதலமைச்சர், தங்களுக்கு அளித்த உறுதியை நிச்சயமாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் தான் உள்ளோம். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பள்ளிகளில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்' என்று கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு (TNSE - JACTO) சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு பணி மூப்பை (seniority) மட்டுமே தேவையான தகுதியாக கருத வேண்டும், ஆசிரியர் தகுதி தேர்வில் (TET - Teachers Eligibility Test) தேர்ச்சி பெற வேண்டும் எனும் விதிமுறையை தமிழக அரசு முழுமையாக நிராகரிக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் அந்தந்த பள்ளிகளிலேயே உடனடியாக பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
அதேபோல, உயர்கல்வி தகுதிக்கு வழங்கிய ஊக்க ஊதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அனைத்து பகுதி நேர ஆசிரியர்களையும் தொகுப்பூதிய ஆசிரியர்களையும் முழு நேர ஆசிரியர்களாக மாற்றி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும், மேலும் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் காலியாக இருக்கும் உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பப்பட வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய ஆசிரியர் பெருமாள்சாமி, ''பல்வேறு சங்கங்கள் ஒன்றிணைந்து 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இரண்டு நாட்களுக்கு முன்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறையில் எல்லாவற்றிலும் பகுதி நேர ஆசிரியர்களை அமல்படுத்தி வருகிறார்கள். முதலமைச்சர் எங்களை அழைத்துப் பேசி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: என்எல்சி முற்றுகை போராட்டம்.. அன்புமணி ராமதாஸ் கைது - போலீஸ் வாகனம் மீது கல்வீச்சு!