பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், மாணவர்களுக்கு 17ஆம் தேதி முதல் 31ஆம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பள்ளிகள் மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் உள்ளவர்கள் தவிர, அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மார்ச் 31ஆம் தேதிவரை வீட்டிலிருந்து தங்கள் பள்ளி தொடர்பான வேலைகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் வீட்டிலிருந்தபடியே தங்களது பணிகளை மேற்கொள்ளலாம்.
2020 -21ஆம் கல்வியாண்டிற்கான கற்றல் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் தயார் செய்வதற்கான பணிகளைத் தொடங்கலாம். ஆசிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான கலையினை மாணவர்களுக்கு கற்றுத்தர நடனம், பாரம்பரிய உணவு சமைத்தல், வண்ணம் தீட்டுதல், நடிப்பு ஆகியவற்றிற்கான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அவ்வாறு தயார் செய்வதன் மூலம் மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்துவதற்கு ஏதுவாக அமையும்.
மார்ச் 31ஆம் தேதி தொடங்க திட்டமிட்டிருந்த 11, 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. இதுகுறித்து தேதி பின்னர் அறிவிக்கப்படும். தேர்வுகள் மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தொடர்பாக பணிபுரியும் ஆசிரியர்கள் அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.
முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் எந்த நேரத்தில் அழைத்தாலும் பதில் அளிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவால் மதுரையில் ஒருவர் உயிரிழப்பு! அதன் பின்னணி என்ன?