சென்னை சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் 91ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மாநில துணைத் தலைவர்கள் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, செந்தமிழன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கே.எஸ். அழகிரி முன்னிலையில் தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆர். ராஜகோபால் மற்றும் மார்க்சிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த மாவட்ட அவைத் தலைவர் மா.வே. மலையராஜா தலைமையில் நூற்றுக்கணக்கானோர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைந்து கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ். அழகிரி கூறுகையில், "குமரி அனந்தனிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. உயர்வு தாழ்வு என எந்த சூழ்நிலையையும் கடந்து தேசிய நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர் இலக்கியச் செல்வர் அண்ணன் குமரி அனந்தன்.
அவர்களுடைய சொல்லும் செயலும் உடையும் தேசியத்தின் அடையாளம் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் நூறாண்டு காலம் வாழ வேண்டும் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும். பெருந்தலைவர் காமராஜரை நினைவுபடுத்த வேண்டும். தமிழக காங்கிரசின் சின்னமாக விளங்க வேண்டும் என வாழ்த்துகிறேன். இரண்டு புதிய வரவுகள் இன்றைக்கு எங்களுக்கு வந்திருக்கின்றார்கள். ஒருவர் ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபால். அதிகார அமைப்பில் நீண்ட அனுபவம் உடையவர் சிறந்த செயல்பாட்டாளர். இந்திய அரசு நடைமுறையில் ஆழ்ந்த அனுபவமும் உடையவர் நிதானமானவர். மற்றொருவர் மார்க்சிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த மாவட்ட அவைத் தலைவர் மா.வே. மலையராஜா. காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து இருப்பது எங்களது படைப்பிரிவில் மேலும் ஒரு தளபதி வந்திருக்கிறார் என்பது போன்ற மகிழ்ச்சி அளிக்கிறது.
ராகுல் காந்தியின் இல்லத்தைச் சுற்றி காவல்துறை நிற்கின்றார்கள். அவர் என்ன குற்றம் புரிந்தார். அவருக்கு பாதுகாப்பு வழங்க நிற்கின்றார்களா அல்லது சிரமம் கொடுக்க நிற்கின்றார்களா என்பது தெரியவில்லை. இங்கிலாந்துக்கு ராகுல் காந்தி சென்றார். ஜனநாயகத்தை பற்றி பேசுவதற்காக அங்கு இருக்கின்ற உயர் குழு வரவேற்றனர். ஜனநாயகத்தின் மாண்புகளை பற்றி பேசினார் எப்பொழுதெல்லாம் ஜனநாயகத்திற்கு இரும்புத்திரை விதிக்கப்படும் என்பதை தெளிவாக எடுத்துச் சொன்னார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளினுடைய கருத்துக்கள் முடக்கப்படுகின்றது என்பதை எடுத்துச் சொன்னார். ஒலிபெருக்கி துண்டிக்கப்பட்டது என்பதை எடுத்துச் சொன்னார். பேசுவதற்கு அனுமதி வழங்குவதில்லை என்று சொன்னார்.
அவர் ஜனநாயகமே தவறு என்று சொல்லவில்லை. ஜனநாயக நாட்டில் பேச அனுமதிக்க வில்லை என்று தான் சொன்னார். இது எப்படி தவறாகும். இந்திய ஜனநாயகத்தை மோடி நாடாளுமன்றத்தில் காலில் போட்டு மிதிக்கின்றார். பிரதமர் மோடிக்கு எதிராக ஒரு கருத்தை சொன்னால் அது இந்தியாவிற்கு எதிரான கருத்து என்பது போல சொல்கின்றார்கள். மோடியின் செயல்பாடுகள் சரியில்லை. பாஜகவின் செயல்பாடுகள் சரியில்லை என்று சொன்னால் இந்தியாவிற்கு எதிராக பேசுகின்றார்கள் என்றும் தேசத்திற்கு எதிராக பேசிகின்றார்கள் என்றும் சொல்கின்றார்கள்.
வரும் 28ஆம் தேதி வைக்கம் போராட்ட நூற்றாண்டை கொண்டாடுவதற்காக ஈரோட்டில் இருந்து வைக்கம் நோக்கி ஒரு பேரணி நடக்க இருக்கிறது. கேரள காங்கிரஸ் கட்சியும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் இணைந்து இந்த பேரணியை நடத்துகிறோம்.
தந்தை பெரியார் அன்றைக்கு வைக்கம் போராட்டத்தை தொடங்கிய இடம் அது.
இந்த பேரணி நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பதற்காக குழு நியமிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பாக அந்த பேரணியை தொடங்கி வைக்கின்றேன். கேரளா காங்கிரஸ் கட்சி சார்ந்த பல்வேறு தலைவர்கள் அதில் கலந்து கொள்கின்றனர். 50,000 மாணவர்கள் தேர்வு எழுதாமல் இருப்பதை நாம் அலட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அது சமூகப் பிரச்சனையாகும். நாளை அந்த 50,000 பேரும் வேலை சமூகத்தில் பின்னுக்கு தள்ளப்படுவார்கள்
மொபைல் போனால் மாணவர்கள் கெட்டுப் போகின்றார்கள். விஞ்ஞானத்தை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால், அது வளர்ச்சிக்கானதாக மட்டுமே இருக்க வேண்டும். கல்லூரிகளிலும், பள்ளிக்கூடங்களிலும், மழலை பள்ளிக்கூடங்களிலும், மொபைல் போன் கலாச்சாரம் வந்துவிட்டது. ஆசிரியர் பாடம் நடத்தும் பொழுது கூட மாணவர்கள் போனை பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். இது நடைமுறைக்கு சரிப்பட்டு வராது. கல்விக் கூடங்களில் ஆசிரியர்களும், மாணவர்களும் எக்கரணத்தைக் கொண்டும் செல்போனை உபயோகிக்க கூடாது என்ற சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும். அப்படி இயற்ற வில்லை என்றார் அறிவற்ற தமிழ்ச்சமூகம் தான் உருவாகுமே தவிர அறிவுள்ள தமிழ்ச்சமூகம் உருவாகாது. அதேபோல் மாணவர்கள் கையில் மதுபானம் கிடைக்காத அளவிற்கு சட்டம் இயற்ற வேண்டும் இல்லையென்றால் நமது சமூகமே முன்னேற முடியாது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கூட்டணி குறித்து பேச எனக்கு அதிகாரம் இல்லை - அண்ணாமலை