தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான பணியிட மாறுதல் கலந்தாய்விற்கு ஜூன் 21ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூலை 8ஆம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது. ஜூலை 13ஆம் தேதி அரசு, நகராட்சிப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
அதன் அடிப்படையில், 208 முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி, 13,623 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன.
இந்த பணி நியமன கலந்தாய்விற்கான ஆசிரியர்களை கண்டறிவது குறித்தும், அவர்களை பணி நிரவல் செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை வெளியிட்டுள்ளார்.
அதில், ’தமிழ் வழிக் கல்வியைப் பொறுத்தவரையில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்திலும், 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்திலும், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சார முறையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், ஆங்கில வழிக் கல்வியைப் பொறுத்தவரையில், 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் பணி நிரவல் செய்யப்படுகிறது. இந்த விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் அடிப்படையில் ஆசிரியர்களின் பட்டியலை பள்ளிக் கல்வித் துறை தயாரித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 17பி நடவடிக்கையினை திரும்ப பெற்றால் மட்டுமே ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.