தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தொடக்கக் கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்ட நியாயமற்ற, விதிகளுக்குப் புறம்பான அரசாணைகளுக்கு முரணான பணியிடநிரவல் மாறுதலால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக தஞ்சை மாவட்டம், திருபுவனம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியின் இடைநிலை ஆசிரியை லதா, கடந்த 10ஆம் தேதியன்று மரணமடைந்த செய்தி பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியை லதா 20 ஆண்டுகளாக அதே ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றிவந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி நடைபெற்ற பணிநிரவல் கலந்தாய்வில், அவர் பணியாற்றிவந்த திருவிடைமருதூர் ஒன்றியத்திலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டை ஒன்றியத்திற்கு வழங்கப்பட்ட பணிநிரவல் மாறுதல் ஆணையால் மிகுந்த மன அழுத்தத்திலும் மன உளைச்சலிலும் இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி காலை பணிநிரவல் மாறுதல் ஆணை பெற்றவர்கள் உடனடியாகப் பணியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று கல்வித் துறை அலுவலர்கள் திடீரென உத்தரவு பிறப்பித்த நிலையில் மிகவும் அதிர்ச்சியடைந்து கடுமையான மன அழுத்தத்தின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் மரணமடைந்தார்.
அவரது மறைவு தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நியாயமற்ற பணிநிரவல் மாறுதல் ஆணையால் ஒரு அப்பாவி ஆசிரியர் தனது உயிரை இழந்துள்ளார். சமீப காலமாகவே தொடக்கக் கல்வித் துறையில் முன்னுக்குப்பின் முரணான அரசாணைகளும் அரசாணைகளுக்குப் புறம்பான செயல்முறை ஆணைகளும் வெளிவருவது வாடிக்கையாக உள்ளது. மேலும், உயர் அலுவலர்களின் வாய்மொழி உத்தரவுகள் என்ற பெயரில் அரசாணைகளுக்கு முரணான பல்வேறு செயல்கள் நடைபெற்றுவருகின்றன. இதனால் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பமும் ஒருவித அச்ச உணர்வும் ஏற்பட்டுள்ளது.
மேலும், அரசாணைகளுக்கு முரணாக வாய்மொழி உத்தரவு என்ற பெயரில் பத்துக்கும் குறைவாக மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட ஆரம்பப் பள்ளிகளில் பணியாற்றிய இரண்டு ஆசிரியர்களில் ஒருவர் உபரி ஆசிரியர் என்று கணக்கிடப்பட்டு பணிநிரவல் மாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாணைக்கு முரணாக வாய்மொழி உத்தரவு என்ற பெயரில் 61-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளில் பணியாற்றும் 3 ஆசிரியர்களில் ஒரு ஆசிரியர் உபரி ஆசிரியர் என்று கணக்கிடப்பட்டு பணிநிரவல் மாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான வாய்மொழி உத்தரவுகள் மாணவர்களின் கல்வி நலனுக்கும் ஆசிரியர்களின் நலன்களுக்கும் முற்றிலும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாகும். இதனால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் தொடக்கக்கல்வி வெகுவாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பத்துக்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளதால் வரும் ஆண்டுகளில் அப்பள்ளிகள் மூடப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
அரசாணைகளோ அல்லது எவ்விதமான செயல்முறை ஆணைகளோ இல்லாமல் வாய்மொழி உத்தரவு என்ற பெயரில் நடைபெற்றுள்ள பணிநிரவல் மாறுதல் கலந்தாய்வில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான நடைமுறை கடைப்பிடிக்கப்படாமல் அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் தங்கள் விருப்புவெறுப்பிற்கும் புரிதலுக்கும் ஏற்ப கலந்தாய்வை நடத்தியுள்ளனர்.
எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாத முறையற்ற மாறுதல் ஆணைகளின் காரணமாக ஒரு ஒன்றியத்தில் 20 அல்லது 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஆசிரியர்கள் உபரி ஆசிரியர்கள் என்று கூறி பணிநிரவல் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அப்பாவி ஆசிரியர் ஒருவரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு நடந்து முடிந்த பணிநிரவல் மாறுதல் கலந்தாய்வை ரத்துசெய்து அரசாணைகளுக்குட்பட்டு கலந்தாய்வை நடத்திட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.