சென்னை: ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் அருண் (44). இவர் தேனாம்பேட்டை போயஸ் சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வருகிறார். இந்த டீக்கடையில் கடந்த 2 ஆண்டுகளாக தேனாம்பேட்டையைச் சேர்ந்த பெரியபாண்டி (28) என்பவர் டீ-மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று(அக்.6) மாலை 6 மணியளவில் டீ-மாஸ்டர் பெரியபாண்டியிடம், உரிமையாளர் அருண் வேலையைவிட்டு நின்று கொள்ளுமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பெரியபாண்டி டீக்கடையில் கொதித்துக்கொண்டிருந்த பாலை சட்டியுடன் தூக்கி உரிமையாளர் அருண் மீது ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதைக்கண்டு அருண் சுதாரிப்பதற்குள் கொதிக்கும் பால் அவரது இடது கை முழுவதும் பட்டு தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் உரிமையாளர் அருணை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 20% தீக்காயங்களுடன் அருண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக அருண் அளித்த புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் டீ-மாஸ்டர் பெரியபாண்டி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.