தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவரும் சபாநாயகருமான மு.அப்பாவு கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் நடைபெறும் 65ஆவது காமன்வெல்த் மக்களவை மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு, வடஅமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.
இப்பயணத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், சேக்ரமெண்டோ மற்றும் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் சார்பில் அப்பாவுக்கு வரவேற்பு நிகழ்ச்சி கடந்த 21ஆம் தேதியன்று சிலிகான் ஆந்திர பல்கலைக்கழக வளாகத்தில் இந்தியத்தூதர் முனைவர் டி .வி. நாகேந்திரபிரசாத் தலைமையில் நடைபெற்றது.
அப்போது பேசிய அப்பாவு, "தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது அனைவருக்குமான அரசு. சாமானியர்களுக்கு உண்டான அரசு. சாமானியப் பிரச்னைகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தமிழ் எழுத்துரு உருவாக்கப்பேராசிரியர் மு . அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழுவொன்று தொடக்கி செவ்வனே செய்தார்.
அன்றைய கால கட்டத்தில் மென்பொருள் துறை, மென்பொருள் பூங்கா ( TIDEL Park ) உருவானது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். முதலமைச்சர் அறிவுரையின் பேரில் தொடங்கப்பெற்ற " நான் முதல்வன்" திட்டம் மாணவர்களுக்கு எதிர்கால வழிகாட்டியாக விளங்குகிறது.
இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் உதவ வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவை செயல்பாடுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு தொலைக்காட்சி வழியாக மக்களைச் சென்றடைகிறது. நூற்றாண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுவரை நடந்த நிகழ்வுகள் அனைத்தும் வெகு விரைவில் சமூக வலைதளங்களில் கிடைக்கப்பெறும்” என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தைவான் நாட்டின் Hong Fu நிறுவனம் ரூ.1000 கோடி முதலீடு