சென்னை: இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அக்.4 முதல் 6ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்று முதல் அக்.5ஆம் தேதி வரை ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.