தமிழ்நாட்டில் சென்னை உட்பட இரண்டு முக்கிய நகரங்களில் 'ஆப்கோ' திட்டத்தின் மூலம் காவல்துறைக்குத் தேவையான வயர்லஸ் கருவிகள், சிசிடிவி, பாடி வார்ன் கேமரா உள்ளிட்டவை வாங்க 86.57 கோடிகளும், ’டி.எம்.ஆர்’ எனும் திட்டத்தின் மூலம் பத்து மாவட்டங்களுக்கு, டிஜிட்டல் மொபைல், ரேடியோ உள்ளிட்ட கருவிகளுக்காக ரூ57.49 கோடிகளும் ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில், நிறைவடையாத இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு காவல்துறை சார்பில், அலைக்கற்றை கட்டணமாக பத்து கோடி ரூபாயை மத்திய அரசுக்கு செலுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கோ மற்றும் டி.எம்.ஆர் திட்டங்கள் கொண்டு வரப்பட்ட 2017ஆம் ஆண்டு முதல் வாங்கப்பட்ட தொழில்நுட்ப கருவிகளுக்கான தகவல் தொடர்பிற்கு அலைக்கற்றை கட்டணமாக 3.3 கோடி வீதம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, கூடுதல் டிஜிபி அசோக்குமார் தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு காவல்துறைக்கு 'ஆப்கோ' மற்றும் 'டிஎம்ஆர்' ஆகிய திட்டங்களை அமல்படுத்துவதற்கான டெண்டர் முறைகளில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை.ஆனால்,சில அலுவலர்கள் நடைமுறைத் தவறுகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக முதல்வர் உத்தரவின்பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
முடியாத பணிக்காக 10 கோடி ரூபாயை தமிழகக் காவல்துறை கட்டணமாக செலுத்தியிருப்பதும், இதில் முறைகேடு நடந்திருக்கிறதா என விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முதலமைச்சரே உத்தரவிட்டிருப்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.