சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் 2022 - 2023 ஆம் கல்வியாண்டிற்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் பதிவு செய்திருந்த செல்போன் எண்ணிற்கு தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "2022-23 ம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,03,385 பேர் எழுதினர். அவர்களில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்று 94.03 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய 4,21,013 மாணவிகளில் 4,05,753 மாணவிகள் என 96.38 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய 3,82, 371 மாணவர்களில் 3,49,697 மாணவர்கள் தேர்ச்சி அடைந்து 91.45 சதவீதமாக உள்ளது. தேர்வு எழுதி இருந்த மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர் ஒரு மாணவரும் தேர்ச்சி அடைந்துள்ளார். இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் 4.93 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த 2021-22 ம் கல்வியாண்டில் படித்து தேர்வு எழுதிய 8 லட்சத்து 6 ஆயிரத்து 277 மாணவர்களில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 998 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 93.76 சதவீதமாக இருந்தது. 7,533 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்களில் 2,767 மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். 326 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த மே 2022 ம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 23,957 என இருந்தது. இந்தாண்டு 32,501 பேர் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 4,398 மாற்றுத்திறானாளி மாணவர்களில் 3923 பேர் தேர்ச்சி பெற்று 89.20 சதவீதமாக தேர்ச்சி உள்ளது. தேர்வெழுதிய 90 சிறைவாசிகளில் 79 பேர் தேர்ச்சி பெற்று 87.78 சதவீதமாக உள்ளது.
அதிகம் தேர்ச்சிப்பெற்ற 3 மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீதம் பெற்று முதலிடத்தையும், திருப்பூர் 97.79 சதவீதம் பெற்று 2ஆம் இடத்தையும், பெரம்பலூர் 97.59 சதவீதம் பெற்று 3 ஆம் இடத்தையும் பிடித்துள்ளது. அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தில் 96.45 சதவீதம் பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடமும், 95.90 சதவீதம் பெற்று பெரம்பலூர் மாவட்டம் இரண்டாமிடமும், 95.43 சதவீதம் பெற்று விருதுநகர் மாவட்டம் மூன்றாமிடம் பெற்றுள்ளது.
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதுவதற்கு பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 51 ஆயிரத்து 298. அவர்களில் 47,736 மாணவர்கள் வரவில்லை. தேர்வு எழுத பதிவு செய்த மாணவர்கள் 23,753 அவர்களில் 2010 பேர் தேர்வு எழுத வரவில்லை. கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு 0.27 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.
ஜூன் மாதத்தில் துணைத் தேர்வு:
தேர்வில் தோல்வி அடைந்த மற்றும் வருகைப் புரியாத மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு துணைத்தேர்வு ஜூன் மாதம் 19 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களும் இந்தக் கல்வியாண்டிலேயே உயர்கல்விப் படிக்க முடியும் எனவே அதற்கு 9-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
படிக்கும் வயதுள்ள மாணவர்கள் வேறு வழியில் சென்று விடக் கூடாது என்று தான் ஒவ்வொரு திட்டத்தையும் பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது. குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டியது பெற்றோர்களின் கடமை. உயர்கல்வியில் மாணவர்கள் சேர்வதற்கு அரசு சார்பில் உயர்கல்வி வழிகாட்டிக்கு குழு மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டில் தேர்வு எழுதாத குழந்தைகள் துணை தேர்வு எழுதுவதன் மூலம் இந்த ஆண்டில் உயர்கல்வியை தொடர முடியும்.
வரும் 17 ஆம் தேதி 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிட்டோம். 19 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வெளியிட திட்டமிட்டோம். ஆனால் இரண்டு தேர்வு முடிவுகளையும் ஒன்றாக சேர்த்து 19 ஆம் தேதி வெளியிடலாமா என ஆலோசித்து வருகிறோம். 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்விற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் 12 ஆம் தேதி வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்காெள்ளப்பட்டு வருகிறது. வரும் ஆண்டுகளில் தேர்ச்சி சதவீதத்தை இன்னும் அதிகரிக்க முயற்சி எடுப்போம்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் அவர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என கூற முடியாது. அது அவர்களின் உரிமை. இது ஜனநாயக நாடு யார் எந்த பள்ளியில் படிக்க வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது, அரசு பள்ளிகளை தேடி வருபவர்களுக்கு நாங்கள் சிறந்த படிப்பு கொடுக்க முயற்சி எடுப்போம். தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களின் மதிப்பெண்களை பேனர்களாக அவர்களின் அனுமதியை பெற்று வைக்கலாம். ஆனால் ஏற்கனவே உள்ள நடைமுறையை ஆய்வு செய்து தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.