கென்ய நாட்டில் இருபது வயதுக்குள்பட்டோருக்கான உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளிலிருந்து 500-க்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர். இந்தியா சார்பில் மொத்தம் 35 பேர் பங்கேற்றனர்.
இந்தப் போட்டியில் இந்தியா இரண்டு வெள்ளிப் பதக்கங்களும், ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளது. இதில் தமிழ்நாட்டின் சார்பில் போட்டியிட்ட திருவள்ளூரைச் சேர்ந்த பரத் (18), விழுப்புரத்தைச் சேர்ந்த நாகராஜன் (18) ஆகிய இருவரும் 400 மீட்டர் கலப்புத் தொடர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளனர்.
இதையடுத்து, டெல்லியில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். தொடர்ந்து, சென்னை வந்த இருவருக்கும் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டு வீரர்கள், "உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது மிகவும் பெருமையாக உள்ளது. எங்கள் பெற்றோரின் ஒத்துழைப்பு காரணமாகவே எங்களால் வெற்றிபெற முடிந்தது.
ஒலிம்பிக்கில் பங்கேற்க தொடர்ந்து முயற்சிகளை எடுத்துவருகிறோம். தமிழ்நாடு அரசும் எங்களுக்கு உதவிகளைச் செய்தது. அதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றனர்.
தொடர்ந்து பயிற்சியாளர் புகழேந்தி கூறுகையில், "வெண்கலப் பதக்கம் வென்ற இருவரும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பாலும், கடின முயற்சியாலும் வெற்றிபெற்றுள்ளனர்.
ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் தமிழ்நாடு சார்பாக முதன்முறையாக இவர்கள் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர். இவர்கள் இனி வரும் உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்று பதக்கங்களை வாங்குவார்கள்.
தமிழ்நாடு அரசு விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி, உதவி செய்தால் இன்னும் அவர்கள் திறமையை வெளிப்படுத்த உதவியாக இருக்கும். சென்னையில் தடகள விளையாட்டு வீரர்களுக்கு மைதானங்கள் தயார் செய்து தர வேண்டும். மைதானங்கள் குறைவாக உள்ளதால் வீரர்கள் வெகு தூரம் சென்று பயிற்சி எடுக்கும் நிலை உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாமல்லபுரம் சிற்பக் கலைஞர் புண்ணியக்கோட்டியை கெளரவிக்கு மத்திய அரசு