தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை மாநிலத்தில் 9,674 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 66 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2,240 பேர் குணமடைந்துள்ளனர். இத்தொற்றால் சென்னையில்தான் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சமூக நலத்துறை அமைச்சர் வெ. சரோஜா வீட்டில் பாதுகாப்புக் காவலராகப் பணிபுரிந்துவந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுதவிர சென்னையின் பிற பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஏழு காவலர்களுக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழு காவலர்களின் விவரம் பின்வருமாறு:
- சென்னை கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்துவரும் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
- சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரிந்துவரும் பெண் காவலர் ஒருவருக்கும், அதே அலுவலகத்தில் கணினி பணி செய்துவந்த மற்றொரு பெண் காவலருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
- தண்டையார்பேட்டை போக்குவரத்து தலைமைக் காவலர் ஒருவருக்கு கரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. கொண்டிதோப்பு காவலர் குடியிருப்பில் வசித்துவந்த இவர், தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
- சென்னை ஆர்.ஏ. புரத்தில் வசித்து வரும் ஆயுதப்படை காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு கடந்த 12ஆம் தேதி கரோனா பரிசோதனை செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
- சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் நுண்ணறிவுப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிப்புரிந்து வந்த காவலர் ஒருவருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை சூளை பகுதியில் வசித்து வரும் இவருக்கு கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் கரோனா பரிசோதனை செய்ததில் இவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
- பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் ஆயுதப்படை காவலராகப் பணிப்புரிந்து வந்த 27 வயது காவலருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த இவருக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, ஓமந்தூரார் மருத்துவமனைக்குச் சென்று கரோனா பரிசோதனை செய்துள்ளார். அப்போது இவருக்கு கரோனா தொற்று இருப்பதாக பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. இதனால் இவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
இதையும் படிங்க: மக்கள் நலனில் இல்லாத உத்வேகம் மதுக்கடைத் திறப்பில்- அரசை சாடிய கமல்