இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அரசியலில் நாளும் ஒரு அவதூறு அறிக்கை விடுக்கிறேன் என்பதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
நேற்று, தமிழ்நாடு காவல்துறை முழுமையாக அரசியல் மயமாக்கப்பட்டுவிட்டதாகவும், சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும் குற்றம் சுமத்தி இருக்கிறார். இது உண்மைக்கு மாறானது, உள்நோக்கம் கொண்டது.
ஏராளமான ஆதாயக் குற்றங்களும், சைக்கோ கொலைகளும், குறிப்பாக வாரிசு இல்லாத முதியோர்களின் சொத்துக்களை குறிவைத்து நிகழ்ந்த, படுகொலைகளும் திமுக ஆட்சியில் தாராளமாய் நடந்தது.
இவ்வளவு ஏன் சட்டம் ஒழுங்கை சீரழித்த குற்றத்திற்காக மத்திய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஒரே ஆட்சியும், திமுக ஆட்சிதான் என்பதும் வரலாறு. இப்போது கூட தமிழ்நாட்டில் எங்கேனும் ஒன்றாக நடைபெறும் முகம் சுளிக்க வைக்கும் குற்ற சம்பவங்களின் பின்னணிகள் அனைத்திலும் திமுவினர்தான் முன்னணியில் இருக்கிறார்கள்.
இதற்கு காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் இதயவர்மன், பொதுமக்கள் மீது நடத்திய கொலைவெறி துப்பாக்கி சூடும், அவர் வைத்திருந்த கள்ள துப்பாக்கிகளும், தோட்டாக்களும், தோட்டாக்கள் தயாரிப்பதற்கென்றே அவர் தொழிற்சாலை நடத்தியதும், வெட்கி தலைகுனிய வேண்டிய காரியங்கள்.
இதை கண்டிக்க திராணி இல்லாதவர்தான் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் . ஆட்சியல் இல்லாதபோதே திமுகவினர் கொலை, கொள்ளை, அடிதடி என்றெல்லாம் ஒத்திகைகளை தொடங்கி இருப்பதை, மக்கள் உற்று கவனித்துகொண்டுதான் இருக்கிறார்கள்,
மாநிலத்தில் பல பகுதிகளில் திமுகவினர் உட்கட்சி அரசியல் பகையை முன்வைத்து சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த முடியாத ஸ்டாலின், சட்டம் ஒழுங்கை பேணி காக்கும் அரசை குற்றம் சொல்ல உரிமை கிடையாது.
கடந்த திமுக ஆட்சியில் மக்களை மிரட்டி நிகழ்த்தப்பட்ட நிலம் அபகரிப்புக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க, நில அபகரிப்பு தடுப்பு சட்டமும், நில அபகரிப்பு சட்ட பிரிவும், இந்தியாவிலேயே முதன் முதலாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டது.
சட்டம் ஒழுங்கை என்றும் பேணிக்காப்பதில் எவ்வித சமரசத்தையும் ஏற்றுக்கொள்ளாத இயக்கம் அதிமுக. தவறு இழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதற்கு தயங்காத ஆட்சி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் நடைபெறும் எடப்பாடியார் தலைமையிலான ஆட்சி.
“தாயைபோல் பிள்ளை தலைமையை போல் தொண்டன் என்பார்கள்”. எனவே ஜீவகாருண்யத்தையும், நேர்மையையும், திமுக தலைவர் ஸ்டாலின் போதிக்க வேண்டியது அவரது கட்சியினருக்குத்தான்.
மத்திய அரசு அறிவித்த விருதுகளில் மூன்றில் ஒரு பங்கை வென்று சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதையும், சட்டம் ஒழுங்கை பேணிக்காத்ததற்காக விருது பெற்றதையும் நாடறியும்.
அதிமுக ஆட்சியில், காவல் துறை சுயமாக, சுதந்திரமாக கட்டுப்பாட்டுடன் இயங்கும், தமிழ்நாடு காவல்துறை நவீனமயமாக்கப்பட்டு, குற்ற நிகழ்வுகளை குறைக்கப்பட்டுள்ளது.தற்போது சுதந்திரமாக அரசியல் தலையீடுகள் இல்லாமல், அறத்தின் வழியில், காவல்துறை செயல்பட்டு வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.