சென்னை: தமிழ்நாட்டில் அதிகமான நில அபகரிப்பு தொடர்பான புகார்களை விசாரிக்க, காவல்துறையில் சிறப்பு நில அபகரிப்பு தடுப்பு பிரிவுகள் உருவாக்கப்பட்டன. அதேபோல இது சம்பந்தமான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டன. இது தொடர்பாக கடந்த 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்த இரு அரசாணைகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இருப்பினும், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு தொடர்ந்து செயல்படுவதாகவும், எந்த பணியும் செய்யாமல் அந்த பிரிவில் பணியாற்றும் காவல்துறையினர் ஊதியம் பெறுவதால், நில அபகரிப்பு தடுப்பு பிரிவை கலைக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று(ஆகஸ்ட் 7) சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்றம் தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை ரத்து செய்துள்ள நிலையில், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு தொடர்ந்து செயல்படுவது சட்டவிரோதமானது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழக அரசுத் தரப்பில், நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு என்ற பெயரில் எந்த சிறப்பு பிரிவும் செயல்படாது எனவும், இது சம்பந்தமாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள், நில அபகரிப்பு பிரிவு தற்போது செயல்படவில்லை என சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளதாகவும், மனுதாரரின் குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.
முன்னதாக நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ரத்து தொடர்பாக கடந்த மே மாதம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், "நில அபகரிப்பாளர், நில அபகரிப்பு மற்றும் நில அபகரிப்பு வழக்குகள் குறித்து தெளிவான விளக்கங்களை வரையறுத்த பிறகுதான், மாநில அரசுகள் சட்டங்களை இயற்ற முடியும். தமிழக அரசு தரப்பில் அவ்வாறு விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை. நில அபகரிப்பு வழக்குகள் குறித்து முறையான வழிகாட்டுதல்கள் அல்லது வரையறைகள் இல்லாத பட்சத்தில், அத்தகைய அதிகாரங்கள் தவறாக பயன்படுத்தப்படலாம். எனவே, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு அமைக்கும் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்கிறது" என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இதையும் படிங்க: ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை!