இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலச்சரிவு ஏற்பட்ட செய்தி அறிந்தவுடன் கேரள முதலமைச்சரை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளை அளிக்க வேண்டுமென வலியுறுத்தினேன். நிலச்சரிவில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்கள் குறித்து முழுத் தகவலைப் பெறுமாறு உத்தரவிட்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகளைச் செய்யவும் உத்தரவிட்டேன்.
அதன்படி தேனி மாவட்டத்தில் இருந்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஒரு குழு கடந்த ஏழாம் தேதி நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு விரைந்து தேசிய மீட்புப் பணி குழுவினருடன் இணைந்து மீட்புப்பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கிய 12 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர் குடும்பத்தின் நேரடி வாரிசுதாரர்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" இவ்வாறு அந்த அறிக்கையில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இழப்பீடு வழங்குவதில் தமிழர்களுக்கு பாகுபாடு - பழ. நெடுமாறன்