கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளபோதும், தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பில் ஆறாவது இடத்தில் உள்ள தமிழ்நாட்டில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
கரோனா பரவல் மூன்றாம் கட்டத்தை அடையாமல் தடுக்க சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய ஐந்து மாநகராட்சிகளிலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் நான்கு நாள்கள் முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தகுந்த இடைவெளியை அமல்படுத்தும் வகையிலும், அதே சமயம், பொருளாதார ரீதியில் மக்களின் சுமையைக் குறைக்கும் வகையிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம் போன்றவை செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூன் மாதம் 30ஆம் தேதிவரை மூன்று மாதங்களுக்கு நீட்டித்து அவகாசம் அளித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: முதல்ல பாஸிட்டிவ்; இரண்டாவது சோதனையில் நெகட்டிவ்; மாவட்டம் முழுவதும் நிம்மதி!