கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் காந்திபுரம் பகுதியில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், '1998ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதற்கு பிறகு தற்போது ஒரு பதற்றம் கோவையில் ஏற்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைதியை விரும்புகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் அன்றைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். இச்சம்பவத்தினால் கோவையில் ஒரு ஆபத்து இருப்பது தெரிய வருகிறது. டிஜிபி துரிதமாக செயல்பட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டது மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி இருப்பது பாராட்டத்தக்கது.
தமிழ்நாடு அரசு உளவுத்துறை நடவடிக்கை குறித்து ஆய்வுசெய்ய வேண்டும். உளவுத்துறையை மேலும் பலப்படுத்த வேண்டும். NIAவினால் கூட முன் கூட்டியே கைது செய்யப்பட்டவர்கள் குறித்து கண்காணிக்கப்படாதது கேள்விக்குறியாக உள்ளது. கோவையில் மத அடிப்படையில் மக்களை பிரித்துப்பார்க்காமல் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.
மேலும் அவர், 'அனைத்துக் கட்சி கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும். அமைதியை நிலை நாட்ட வேண்டும். பாஜக வரும் 31ஆம் தேதி நடத்த இருக்கும் பந்த் தேவையா என்பதை யோசிக்க வேண்டும். அரசியல் ஆதாயத்தோடு நடத்தப்படும் போராட்டங்கள் தேவையா என மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். பதற்றமான சூழ்நிலையில் போராட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும். அனைவரும் இணைந்து அமைதியைக் காக்க செயல்பட வேண்டும்.
விசாரணை நடைபெறுவதற்கு முன்பே அரசியல் கட்சித்தலைவர்கள் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
யாரோ சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களையும் குற்றம் சுமத்த முடியாது’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜக பந்த் அறிவிப்பினை திரும்பப்பெற்று அமைதிக்கு உதவவேண்டும்: கோவை எம்.பி.