சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் மன்றத்தின் சார்பில் விளையாட்டு விழா போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா, அவரது மனைவி சுஜாதா சூரப்பா ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சூரப்பா, "என்னுடைய அமெரிக்க பயணத்தின் மூலம் பல பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளன. இந்தப் பயணத்தால் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களை சந்தித்தபோது வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகம் கல்வி மற்றும் வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு பல்கலைக்கழகம் என்கிற தகுதியை வழங்குவதற்கு மத்திய அரசு முன் வந்துள்ளது. தமிழ்நாடு அரசு அதனை கருத்தில் கொண்டு அதற்குரிய நிதி ஒதுக்கீடு செய்து, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு பல்கலைக்கழகம் என்கிற தகுதியை பெற்றுத் தர முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு பல்கலைக்கழகம் என்கிற தகுதி கிடைப்பதால், பல்கலைக்கழகத்தின் உரிமைகள் மாநில அரசிடமிருந்து மத்திய அரசிற்கு செல்லும் என்பது தவறான கருத்தாகும்" என்றார்.
இதையும் படிங்க : உச்ச நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகள் பதவியேற்பு