ஓமன் நாட்டிலிருந்து தமிழ்நாடு திரும்பிய ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்ட பின் வீடு திரும்பியுள்ளார். இந்தச் சூழலில் சென்னை வந்த இரண்டாவதாக ஒரு நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் ராம்பூர் மாவட்டத்தைச் சார்ந்த இந்த இளைஞர் கடந்த 8, 9ஆம் தேதிகளில் டெல்லியில் இருந்துள்ளார். டெல்லியில் இருக்கும்போதே கரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால் அங்கு மருத்துவத்துவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார். அங்கிருந்து 10ஆம் தேதி புறப்பட்டு ரயில் மூலம் 12ஆம் தேதி சென்னை வந்துள்ளார்.
பின்னர் அவர் சென்னையிலுள்ள தனது நண்பர்களுடன் தங்கியிருந்துள்ளார். அவருக்கு நோயின் தாக்கம் அதிகரிக்கவே சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்குச் சிகிச்சை பெறுவதற்கு 16ஆம் தேதி வந்துள்ளார். அங்கு அவரின் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தனி வார்டில் வைத்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருடன் தங்கியிருந்த நண்பர்கள் பத்து பேர் மருத்துவமனையில் வைத்து தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கரோனா நோய் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் பரவும் என்பதால், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை டெல்லி அரசிடம் அவர் சிகிச்சை பெற்ற விவரங்களைக் கேட்டு கடிதம் எழுதியுள்ளது. அவர் வந்த ரயில் பெட்டியில் பயணம் செய்தவர்களின் விவரங்களையும் ரயில்வே நிர்வாகத்திடம் கேட்டுள்ளது.
டெல்லி அரசு மற்றும் ரயில்வே நிர்வாகத்திடமிருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் அவருடன் பயணம் செய்த அனைவரும் மக்கள் நல்வாழ்வுத் துறையால் கண்காணிக்கப்பட உள்ளனர்.
தமிழ்நாட்டில் தற்போது வரை 290க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் 39 நபர்கள் கரோனா தொற்று அறிகுறியுடன் உள்ளதால் தனி வார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா தொற்று: தமிழ்நாட்டில் எண்ணிக்கை 3ஆக உயர்வு!