தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில், புயல், வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் சிக்கிக்கொள்ளும் பொதுமக்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று ராமநாதபுரம், காரைக்கால், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த ஒத்திகையில், புயலின் போது கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிப்பது, கால்நடைகளை எவ்வாறு மீட்பது உள்ளிட்ட நிகழ்வுகளை தத்ரூபமாக செய்து அசத்தினர்.
இதேபோல் காரைக்காலில், துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர், மீட்புப் படையினரின் அவசர பணிகள், வேகமாக சென்ற ஆம்புலன்ஸ் உள்ளிட்ட சம்பவங்கள் போன்ற காட்சிகளை கண்ட காரைக்கால் மக்கள் குழப்பமும், அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி என தெரியவந்ததால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதேபான்று ராமநாதபுரம், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் தீயணைப்பு துறை, வருவாய் துறை, காவல்துறை உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பங்கேற்று ஒத்திகை நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.
இந்த பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சியில், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.