சமீபத்தில் ஹைதராபாத்-ல் பெண் மருத்துவர் ஒருவர், நெடுஞ்சாலையில் தனியாக இருக்கையில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். அதையடுத்து எரிந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. பெண்களுக்கான பாதுகாப்பு இந்தியாவில் இல்லாத சூழல் நிலவுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினர். அதேபோல் இந்த வழக்கு சம்பந்தமாக தெலுங்கானா காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்த சம்பவத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு காவல்துறை டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், பெண்கள்,மாணவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் ஆகியோரிடம் காவலன் கைப்பேசி செயலி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என காவல்துறையினருக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொதுமக்கள் பிரச்னை என வந்தால் காவல்துறையினர் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், புகாரை பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை நடத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் காவல்துறையினர் தொடங்கிய ''காவலன் செயலி''யை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் எனவும், பொதுமக்களின் பாதுகாப்பில் தமிழ்நாடு முதன்மையான இடத்தில் இருக்க வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காவலன் செயலியை தங்களது செல்லிடப் பேசியில் பெண்கள் வைத்திருந்தால், அவசர உதவிக்கு காவல் துறையினரை அழைக்க நினைக்கையில் இந்த செயலியில் இருக்கும் பட்டனை அழுத்தினால் போதும். அது உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்று, காவல் துறையினரின் ரோந்து வாகனம் உடனடியாக உதவிக்கு வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஹைதராபாத் மருத்துவர் கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!