இதுதொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது," வெளிநாடுகளுக்குச் சென்று தமிழ்நாடு திரும்பியவர்கள், அவர்களோடு தொடர்புடையவர்கள் என தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 2 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
அவர்களில் 90 ஆயிரத்து 541 பேர் தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர். இதில், 5 ஆயிரத்து 315 பேர் மருத்துவக் கண்காணிப்பு முடிந்து, தற்போது வீடு திரும்பியுள்ளனர். அவர்களோடு தொடர்புடைய நண்பர்கள், உறவினர்களிடமிருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைகளும் செய்யப்பட்டுவருகின்றன.
டெல்லி மாநாட்டிற்குச் சென்று தமிழ்நாடு திரும்பிய 73 பேர், வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் என, இன்று ஒரு நாள் மட்டும் 74 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை , தமிழ்நாட்டில் 485 ஆக அதிகரித்துள்ளது.
இந்த 485 பேரில் 422 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என உறுதிசெய்யப்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்களுக்குத் தனி கவனம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில், 7 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
19 மாவட்டங்களில் மட்டுமே இருந்த கரோனா பாதிப்பு தற்போது 31 மாவட்டங்களுக்குப் பரவியுள்ளது. மாநில எல்லை, ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால், மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் கட்டுக்குள் வைக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்காமல் தடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க...களப்பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!