இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு நீதி கிடைக்குமா, என்கிற சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துவருகிறது. இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.
இத்தகைய சூழலில் சாத்தான்குளம் இரட்டைப் படுகொலைக்கு நீதி கிடைப்பதற்கான நம்பிக்கை ஊட்டக்கூடிய அறிகுறிகள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகளின் விசாரணையில் தெரிகிறது. இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் தடயங்கள் அழிக்கப்படவும், சாட்சியங்கள் அச்சுறுத்தப்படவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.
குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகள் நடைபெற்றுவருவதால் நியாயமான விசாரணை நடைபெறுமா, என்கிற கேள்வி எழுந்துள்ளது. மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகளே சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையில் குற்றவாளிகள் மீது கொலைவழக்குப் பதிவுசெய்ய ஆதாரங்கள் இருப்பதாகக் கூறிய பிறகும்கூட தமிழ்நாடு அரசும், காவல் துறையும் அலட்சியப் போக்கோடு நடந்துகொள்ளுமேயானால் எதிர்காலத்தில் மிகப்பெரிய விலையை அதிமுக அரசு கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்க விரும்புகிறேன்.
எனவே, சிபிஐ விசாரணை உடனடியாகத் தொடங்காத நிலையில், குற்றவாளிகள் மீது கொலைவழக்குப் பதிவுசெய்து நீதிபதிகளின் கண்காணிப்பில் நேர்மைமிக்க உயர் அலுவலர்கள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை செய்தால்தான் சாத்தான்குளம் படுகொலைக்கு நீதி கிடைக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சாத்தான்குளம் வழக்கு ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு !