சென்னை: ஒன்றிய அரசின் மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்துள்ளார். ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் திருத்த சட்டங்கள்,
- விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் 2020,
- வேளாண்மை உற்பத்தி மற்றும் வர்த்தக மேம்பாடு 2020,
- அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் 2020
ஆகிய மூன்று சட்டங்களுக்கு தொடக்கம் முதலே திமுக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. திமுகவின் தேர்தல் அறிக்கையிலும், திமுக ஆட்சி அமைந்ததும் ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தது. அதன்படி இன்று (ஆக.28) சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
வழக்குகள் ரத்து
இந்தத் தீர்மானத்தின் மீது அதிமுக, பாஜக எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்புச் செய்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் பேரவையில் வேளாண் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் போராடியவர்களின் மீதான அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுகிறது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவையில் அறிவித்தார்.
முன்னதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா, தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் - அதிமுக, பாஜக வெளிநடப்பு