நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஐந்தாண்டுகளாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. நுகர்வு குறைவு, மக்களின் வாங்கும் திறன் குறைவு, முதலீடுகள் குறைவு, விலைவாசி உயர்வு, வேலையின்மை என தொடர்ந்து எதிர்மறையான தகவல் வந்துகொண்டிருக்கிறது. சர்வதேச மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சி மேலும் குறையும் என கணித்துள்ளன.
அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் உள்ள தங்களது பங்குகளை அதிகளவில் விற்பனை செய்து வருகின்றன. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் இல்லாமலில்லை. ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை குறைத்து வருகின்றன. இதனால், வேலையிழப்புகள் ஏற்படும் என தொழில்துறையினர் கூறுகின்றனர். ஆனாலும் நிலைமை முற்றிலும் மோசமாக உள்ளது என்று கூற முடியாது.
2ஆவது உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு பிறகு ஜப்பான், ஜெர்மனி, தென் கொரியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால், 19 ஆயிரத்து 762 கோடி ரூபாய்க்கு புதிய முதலீடுகள் கிடைக்கும் என்றும், 74 ஆயிரத்து 814 வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தொழில் நிறுவனங்களில் பணிபுரிய போதிய தகுதிபெற தொழிலாளர்களுக்கு உள்ள குறைபாடுகள் குறித்து அலசும் 'திறன் குறைபாடு அறிக்கை'யை (Skill gap assessment) முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் வெளியிட்டார். அதேபோல், மாவட்ட திறன் மேம்பாட்டுத் திட்டத்தையும் அவர் வெளியிட்டார்.
இது குறித்து பேசிய தொழில்துறை ஆலோசகர் ஒருவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தொழில்துறைக்கு சாதகமான முடிவை எடுப்பர் என முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். ஆந்திராவில், புதிய அரசு அமைந்த பிறகு கவர்ச்சிகர மக்கள் நலத்திட்டத்திலேயே கவனம் செலுத்தப்படுகிறது. முந்தைய ஆட்சி காலத்தில் போடப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல் மஹாராஷ்டிராவில் புல்லட் ரயில் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலங்களின் நம்பகத்தன்மை குறைந்துள்ளது" என்றார்.
தமிழ்நாட்டுக்கு வரும் அந்நிய நேரடி முதலீடுகள், கடந்த 2017 மார்ச் மாதத்தில் ரூ.133 டிரில்லியனாக இருந்த நிலையில் 2019 ஜூன் மாதத்தில் ரூ.180 டிரில்லியனாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, அந்நிய முதலீடுகள் 46 ஆயிரத்து 427 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது. வரும் 2021ஆம் ஆண்டிற்குள் நாட்டில் அந்நிய நேரடி முதலீடு பெறும் மாநிலங்கள் பட்டியில் முதலிடம் பிடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மந்த நிலையால் தமிழ்நாடு பெரிய அளவுக்கு பாதிக்கப்படாததற்கு முக்கிய காரணம் பல்வேறு துறைசார்ந்த தொழில்கள் உள்ளதும், உற்பத்தி துறையும், சேவை துறையும் சரியான விகிதத்தில் உள்ளதுமே என்று கூறலாம்.
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி தொடர்பாக ஈடிவி பாரத்திற்கு பேட்டியளித்த தொழில்துறை அலுவலர் ஒருவர், "புதிதாக தொழில் தொடங்க வரும் நிறுவனங்கள் பல்வேறு தேவைகள் உள்ளது. மற்ற மாநிலங்களில் குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் கிடைத்தாலும், திறன்வாய்ந்த தொழிலாளர்கள், தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் உள்ளதால் நிறுவனங்கள் தமிழ்நாட்டை தேர்வு செய்கின்றன.
நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் நிலம் வழங்கும் வகையிலும், தென் தமிழ்நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும், முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு ஏராளமான மானியங்கள் வழங்கப்படுகின்றன. தற்போதைய சூழலில் நிலம் கையகப்படுத்துவதில் சிரமங்கள் உள்ளன. இதனை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.