சென்னை: பெட்டிக்கடை ,பகிரி படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சேரன் நடிப்பில் உருவாகி உள்ள தமிழ்க்குடிமகன் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் மாரி செல்வராஜ், தங்கர்பச்சான், அமீர், நடிகர் சரத்குமார், பொன்வண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் தங்கர்பச்சான் பேசுகையில், காலங்காலமாக அடக்கி வைத்திருந்த உணர்வை இயக்குநர் இசக்கி வெளிப்படுத்தி உள்ளார். சாதி பிரிவினை மற்றும் சாதி அடக்குமுறை பற்றி பேசுகிறோம் ஆனால் எங்கே செயல்படுத்துகிறோம்? அதிகாரத்தையே சாதியை வைத்து தான் பெறுகிறார்கள். மக்கள் முன்பு மாதிரி அல்லாமல் மாறிக்கொண்டு வருகின்றார்கள். வெறும் வலிகளை சொல்லும் படங்களைத் தாண்டி இணைக்கும் படங்களும் வரவேண்டும்.
விடுதலை எதற்காக வாங்கப்பட்டது? பல குற்றவாளிகள் கைகளில் தேசியக்கொடி போகிறது. சுதந்திர தினத்தை ஒருநாள் விடுமுறையாக தான் கொண்டாடுகிறோம். மேலும் நாங்குநேரி சம்பவம் பற்றி என்னால் பேச முடியவில்லை. சாதிய பாகுபாடு, சாதிய அடக்குமுறை, சாதிய பிரிவினை இதெல்லாம் குறையும் மாதிரி திரைப்படம் வர வேண்டும். எல்லோரிடமும் வன்மத்தை உருவாக்கும் படம் எடுக்க கூடாது என கூறினார்.
மேலும் நாங்குநேரியில் நடந்த சம்பவம் அவமானத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அரசர்கள் அதிகாரத்தை பெற விரும்புபவர்கள். சாதியை தண்ணீர் ஊற்றி வளர்ப்பவர்களே சாதி ஒழிய வேண்டும் என்று பேசுகிறார்கள். என்ன முரண் இது? வெட்கமே இல்லாமல் அம்பேத்கர் படத்தை நாம் மாட்டி வைத்து அவருக்கு எதிரான செயலை செய்து கொண்டிருக்கிறோம். அவர் படத்தை வைத்து தொழில் செய்வது வருத்தத்திற்குரிய செயலாகும். தொழிலுக்காக நாங்கள் திரைப்படத்தை உருவாக்கவில்லை. மக்களுக்கு எதாவது செய்ய முடியுமா என்று நானும் சேரனும் போராடிக் கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு சின்னத்திற்குப் பின்னாடியும் எவ்வளவு குற்றவாளிகள் இருக்கிறார்கள். சின்னத்தை பார்த்து தான் ஓட்டு போடுவோம் என்றால் சாவுங்கள். அதே மாதிரி தான் சினிமாவும், மக்கள் நினைத்தால் தான் மாறும். நல்ல படங்களை ஆதரித்தால் நாற்றம் பிடித்த குப்பைகள் எல்லாம் காணாமல் போய்விடும் என்று கூறினார்.
மேலும், எழுத்தாளரும் நடிகருமான மு.ராமசாமி பேசுகையில், சவால் நிறைந்த நடிகர்களோடு நடித்து பார்க்கும் ஆசை இருந்ததால் தான் நடிக்க வந்தேன். நாங்குநேரி சம்பவம் மிகவும் சங்கடமாக இருந்தது. அச்சம்பவம் குறித்து சின்னத்துரை தங்கையிடம் விசாரிக்கும் போது 3 அண்ணன்கள் வந்து வெட்டி விட்டார்கள் என்று கூறினாள். அந்த சிறிய குழந்தை கூறியது வெட்கி தலைகுனிய வேண்டிய செயலாகும். தமிழ்க்குடிமகன் என்ற பெயர் அற்புதமான பெயர். இந்த படம் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்று கூறினார்.
மேலும், நடிகர் ரவிமரியா பேசுகையில்,காமெடி டிரெண்டிங் என்பது யாரையும் காயப்படுத்தாத செயலாகும். சமூக கருத்தான படங்கள் எப்படியோ அதுபோல பொழுதுபோக்கான படங்களும் மக்களுக்கு ஆறுதலையும், மன உளைச்சலை நீக்கவும் பயன்படுகிறது. பலபேருக்கு நோய் தீர்க்கும் மருந்தாக காமெடி இருக்கிறது. அதை வேண்டாம் என்று சொல்வதை விரும்பவில்லை. மேடையில் பொது இடங்களில் சமூகநிதியை சொல்வார்கள் ஆனால் சொந்த செலவில் கருத்து சொல்பவர் இசக்கி.
கேரள இயக்குநர்களிடம் இருக்கும் தைரியம் மாரி செல்வராஜிடம் இருக்கிறது. கேரள இயக்குநர்கள் ஒரு நடிகரை காமெடியனாகவும், குணச்சித்திர நடிகராகவும் மாற்றுகின்றனர். அது போல மாரி செல்வராஜ். மாமன்னன் பார்க்கும் போது எனக்கு கண்ணில் தண்ணீர் வந்து விட்டது. வடிவேலுவை எப்படி மாரி செல்வராஜ் இப்படி மாற்றினார்.பான் இந்தியா என்ற பெயரில் தமிழ் கலைஞர்கள் வாய்ப்பு குறைந்து விட்டது. கலந்து கட்டி பான் இந்தியா படம் பண்ண வேண்டிய சூழல் வந்துவிட்டது. நாம் எந்த தொழில் செய்கிறோமோ அதை வைத்து தான் சாதி உருவாக்கப்படுகிறது. நம் பிறப்பை வைத்து யாரும் சாதி கணிக்க கூடாது என்ற கருத்தை இந்த படம் உணர்த்தும் என கூறினார்.
நடிகர் சரத்குமார் பேசுகையில், நாங்குநேரி சம்பவம் எப்படி இசக்கியை பாதித்திருக்கிறது என்று தெரியும். சாதியில்லா அரசியல் வரும் போது எல்லாம் மாறும். 16 ஆண்டுகளாக இயக்கத்தை நடத்தி வந்தாலும் சாதியை கூறி தான் பேசுகிறார்கள். அன்பை வளர்க்க எடுக்கப்பட மிகப்பெரிய திரைப்படம் தமிழ்க்குடிமகன். சாதியத்தை மாற்றி ஒற்றுமைக்கு என்ன படம் எடுக்கலாம் என்று பார்க்க வேண்டும். உணர்வோடு சென்று இந்த படத்தை பார்த்தால் 100 நாள் ஓடும். 100 நாள் ஓடினால் சாதி ஒழிந்து விடும் என கூறினார்.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். பேசுகையில், எனக்கு சமுதாய கோபம் கண்டிப்பாக உண்டு. இதுவரைக்கும் நான் செய்த இசையில் எதைப்பார்த்தும் காபி அடித்து செய்யவில்லை. இந்த படத்தில் என்னுடைய பங்களிப்பு 30% தான் இருக்கிறது. இந்த படத்தை கண்ணை மூடி பார்த்தால் ஆங்கில படம் மியூசிக் இருக்கும். இசை வெளியீட்டு விழாவில் விழா நாயகன் என்று இசையமைப்பாளரை கூறுவார்கள். ஆனால் நம்மை பற்றி யாரும் பேச மாட்டார்கள். ஆளுநர் மாதிரி உட்கார்ந்து செல்ல வேண்டும். ஆனால் இந்த படத்தில் பணியாற்றியதற்காக பெருமை படுகிறேன். இந்த படம் 100 கோடி வசூல் இல்லை என்றாலும் பரவாயில்லை, 10 கோடி மக்களை போய் சேர்ந்தால் போதும் என கூறினார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், நம்மை அழைப்பவர்கள் நம்மை விரும்புபவர்கள் என்று தெரியும். சேரனிடம் உதவி இயக்குனராக பணியாற்ற வேண்டும் என்று ஆசை இருந்தது. சினிமா சாதாரணமானது கிடையாது, சினிமா கலைஞர்கள் சாதாரணமானவர்கள் கிடையாது. 35 வருடமாக காத்திருந்த எனக்கு இன்னும் காத்திருப்பது பெரிய விசயம் கிடையாது. என்னுடைய வலியை, என்னுடைய அரசியலை நியாயத்தை புரிந்து கொண்டவர்கள் கலைஞர்கள். சினிமாவில் இருப்பது பெருமையாக இருக்கிறது மேலும் என்னுடைய 3 படங்களையும் கொண்டாடியது சினிமா உலகம் தான்.
முரண்பட்ட அரசியல் தான் சினிமாவில் இருக்கும். எது வேண்டும் எது வேண்டாம் என்று அனைவருக்கும் தெரியும். எந்த அரசியலையும் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. எந்த அரசியல் வேண்டும் என்பதை சமூகம் முடிவு செய்யும். அரசியல் பேசுவதை தடுத்து நிறுத்த முடியாது. நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விசயம் நிறைய இருக்கிறது. நாம் ரொம்ப கவனமாக நீச்சல் போட வேண்டிய தேவை இருக்கிறது. தமிழ்க்குடிமகன் வெற்றிபெற வாழ்த்துகள் என கூறினார்.
நடிகர் சேரன் பேசுகையில், இந்த படம் முக்கியமான படம் என்பதால் தியேட்டருக்கு வந்து படம் பாருங்கள். பைத்தியகாரர்கள் சேர்ந்து உருவாக்கிய படம் தான் தமிழ்க்குடிமகன். ஆனால் பைத்தியக்காரத்தனமான படம் கிடையாது. புத்திசாலித்தனமான படம். சாதி, மதங்களை கடந்து மனிதனாக வாழ்வோம். கிராமத்தில் மட்டும் சாதியை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அங்குதான் வெட்டுவது போன்ற குற்றம் நடக்கிறது. அங்குதான் ஏதோ குறை இருக்கிறது. அதை வைத்து தான் அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.
மேலும் சிட்டியில் சாதியை வைத்து யாரும் வெட்டிக் கொள்வதில்லை. வேறு எதற்கோ வெட்டிக் கொள்கிறார்கள். பா.ரஞ்சித்தும், மாரி செல்வராஜும் அவர்களுடைய உரிமையை சத்தமாக கத்தி வாங்குகிறார்கள். உரிமையை பெற்ற பின் எல்லோருடைய கையை பிடித்தால்தான் சமூகத்தை உருவாக்க முடியும். ஒரு சாதி சமூகத்தை தீர்மானித்து விடாது. உரிமை வேறு, சாதி வேறு என கூறினார்.
இயக்குநர் அமீர் பேசுகையில், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றவர்கள் படம் எடுத்து தான் பிரச்சினை உருவாக்குகிறார்கள் என்று வீடியோ பார்த்தேன். இந்த வார்த்தை தேவர் மகன், சின்ன கவுண்டர் எடுக்கும் போது வரவில்லை. பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் சொல்வதை மக்கள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். மாரி செல்வராஜ் யாரையும் சண்டைக்கு கூப்பிடவில்லை. என்னை ஏன் இப்படி நடத்துகிறீர்கள் என்று கேட்கிறார். அந்த கேள்வி முக்கியம்.
மேலும், சாதி இன்றைக்கு மேலோங்கி இருக்க காரணம் அரசியல் தான். சாதியை உருவாக்கியது சனாதனம். சாதியை பிடித்துக் கொண்டிருப்பது அரசியல். உயிர்ப்புடன் வைத்துக் கொண்டிருப்பது அரசியல். அந்த அரசியல் மாற்றத்தை நிகழ்த்த வேண்டும்சினிமா சாதியை ஒழித்து விடாது, விவாதங்கள் மூலமாக கேள்விகள் மூலமாக மாறும்.
எல்லோருடைய கைகளும் ஒன்று சேரும் போது புதிய அரசியல் உருவாகும். குருகுலம், பாடசாலை, அரசுப்பள்ளி இவ்வளவையும் தாண்டி நிறைய விசயங்கள் இருக்கிறது. சாதி, மதப்பெருமை எதுவுமே தேவையில்லை. மனிதனாய் வாழ்வோம் என கூறினார்.
இதையும் படிங்க: கோவையில் பெட்டிக்கடையில் வைத்து சட்டவிரோதமாக மது மற்றும் போதை பொருட்கள் விற்பனை!