சென்னை: சென்னை லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் தெலங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்று ஓராண்டும் நிறைவு பெற்றதை முன்னிட்டு அவர் குறித்த புத்தகம் வெளியீட்டு நிகழ்ச்சி, ஊடகம் மற்றும் பத்திரிகையாளர் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று (ஏப்ரல்19) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை, "நான் அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை. அன்பை தான் பயன்படுத்துகிறேன். நான் தலைவராகவோ, மருத்துவராகவோ, அல்லது ஆளுநராகவோ வேறு எதுவாக ஆனாலும் அடிப்படையில் எளிமையாக அணுக வேண்டும் என்பதை புரிந்து வைத்துள்ளேன். விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்.
நான் தலைவராக இருக்கும் போதும் விமர்சனம் செய்தனர். இப்பொழுது ஆளுநராக இருக்கும் போதும் விமர்சனம் செய்கின்றனர். நான் டெல்லிக்கு திருமணத்திற்கு சென்றிருந்தேன். அதற்குள் என்னை தெலங்கானாவில் இருந்து கேரளாவிற்கு மாற்றிவிட்டனர் என விமர்சனம் செய்கின்றனர்.
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் உரையை தமிழில் படிப்பதற்கு வாய்ப்பளித்த ஆண்டவனுக்கும் ஆண்டவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தெலங்கானா ஆளுநர் பதவியில் இருந்து என்னை மாற்றப்போவதாக செய்திகள் வருகின்றன. ஏனென்றால் அங்கே வலிமையான ஆளுநர் வேண்டுமாம். பெண்கள் என்றால் வலிமை இல்லை என்று நினைக்கிறீர்களா? நான் சவால் விடுகிறேன், என்னைவிட வலிமையான ஆளுநர்கள் யாரும் இருக்க முடியாது. என்னை தவிர அந்த முதலமைச்சரை எதிர்கொள்ள யாராலும் முடியாது.
இரண்டு மாநிலத்திலும் ஒரு வேலையைக் கூட குறை சொல்ல முடியாத அளவுக்கு காலையிலிருந்து மாலை வரை கடுமையாக உழைக்கிறேன். நான் இரண்டு மாநிலங்களுக்கும் ஆளுநராக இருந்தாலும் முதலில் எனது தாய் தமிழ் மக்களுக்கு சேவை செய்யவே ஆசையாக இருக்கிறது. அழைப்பு வந்தால் அதை அரசியலாக பார்க்காதீர்கள். அன்பாக பாருங்கள். அழைப்பு வந்தால் அதற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது தமிழர் பண்பாடு.
ஆளுநரும் முதலமைச்சரும் இணைந்து பணியாற்றினால் எப்படி நன்றாக இருக்கும் என்பதற்கு உதாரணம் புதுச்சேரி. ஆளுநரும் முதலமைச்சரும் சண்டை போட்டுக் கொண்டால் எப்படி இருக்கும் என்பதற்கு தெலங்கானா ஒரு உதாரணமாக இருக்கிறது. இரண்டிற்கும் நான் உதாரணமாக இருக்கிறேன். தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ், மேலவை உறுப்பினர் நியமனத்திற்கு கையெழுத்து போட சொன்னார். ஆனால் நான் கையெழுத்து போட மறுத்து விட்டேன். முதலமைச்சர் சொன்னால் கையெழுத்து போட நான் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது. அவர் மீது சில குறைகள் இருக்கின்றன. நீங்கள் சேவையின் அடிப்படையில் அவரை நியமிக்கச் சொல்கிறீர்கள். ஆனால், என்னால் நியமிக்க முடியாது எனக் கூறியதன் அடிப்படைதான் பிரச்னைக்குக் காரணம். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள் சர்வாதிகார போக்கில் நடந்து கொள்வது தவறான விஷயமாகும். நான் தெலங்கானாவைக் குறிப்பிடுகிறேன்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிர்ப்பு; வாகனம் மீது கொடியை வீசி எறிந்து போராடியதால் பரபரப்பு!