திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் இன்று அதிகாலை காலமானார். கீழ்ப்பாக்கத்திலுள்ள அவரின் இல்லத்திலிருந்து அவரது உடல் வேலங்காடு மின் மயானத்திற்கு ஊர்வலமாக் எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் அன்பழகனின் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்தினர். பின்பு பேராசிரியரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
அவரின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் புகழ்பெற்ற தமிழ் கவிஞர் அறிவுமதி, பேராசிரியருக்கு கவிதை மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வடித்த கவிதை பின்வருமாறு:
தன்மான அடலேறே! தடம் மாறா வரலாறே!
இளம் வயதில் உன் பேச்சை எப்படி நான் குடித்திருப்பேன்!
என் ஊரில் உன் நூல்கள் எத்தனை நாள் படித்திருப்பேன்!
பெரியாரைப் பின்தொடர்ந்த பிழையற்ற புத்தகமே!
அண்ணாவின் அடி நடந்த ஆற்றல் மிகு வித்தகமே!
அண்ணாமலை கொடுத்த அருந்தமிழின் பேராசான்!
என்னாளும் பகுத்தறிவை எடுத்தியம்ப நா கூசான்!
எத்தனை நாள் எத்தனை ஊர் காடென்றும் பார்க்காமல்
கரம்பென்றும் பார்க்காமல் கால் நடையாய் ஓடோடி
களத்தமிழை விதைத்தவரே!
அமைச்சரென இருந்தாலும் அமைச்சரவை இழந்தாலும்
கடுகளவும் பிறழாமல் கட்சியினை மதித்தவரே!
கலைஞருடன் உழைத்தவரே!
எம் வயசுப் பிள்ளையெலாம் உம்மால் தாம் உருவானோம்!
இன்று வரை இழை பிசகா கொள்கையிலே உரமானோம்!
காலமெலாம் எங்களுக்கே கனிவோடு வகுப்பெடுத்தாய்!
காலம் வந்து வயது சொல்ல கட்டாய விடுப்பெடுத்தாய்!
செய்தித்தாள் விற்றவரின் செல்ல மகன் 'வரலாறு'!
அட... செத்தாலும் வற்றாது ‘அன்பழகன்’ புகழாறு!
இவ்வாறு அவர் கவிதை மூலம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இனமானப் பேராசிரியர் அன்பழகனின் புகைப்படத் தொகுப்பு