இந்தியாவில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இன்றளவும் மக்கள் பலர் கட்டாயத்தின் பேரிலும், வேரு வழியின்றியும் செல்வது தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் நடப்பாண்டில் 776 கழிவுநீர் தூய்மையாளர்கள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நாட்டில் நிகழ்ந்துள்ள 776 கழிவுநீர் தூய்மையாளர்கள் உயிரிழப்பில் முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடு. இங்கு மட்டும் 213 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் தடுப்பதையும், மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் முறைக்கு எதிரான நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கரோனா பேரிடர் காலகட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றி மக்களுக்கு தொற்று பரவாமல் காக்க உதவியதற்காகத் துப்புரவு பணியாளர்கள் அனைவரும் இனி தூய்மைப் பணியாளர்கள் என அழைக்கப்படுவார்கள் எனத் தெரிவித்து தமிழ்நாடு அரசு அவர்களை கௌரவப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.