சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவ.15) காலை 08.30 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 510 கிலோ மீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளாதாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் இருந்து இன்றைய தேதி வரை 24.1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தற்போது வடகிழக்கு பருவ மழை திவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களிள் மிக கன மழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. மேலும், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 510 கிலோ மீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், "விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 510 கிலோ மீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ.16) ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
பின் வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி ஒரிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 17 ஆம் தேதி நிலவக்கூடும். இது 18 ஆம் தேதி காலை வடக்கு ஒரிசா-மேற்கு வங்கக்கடலோரப்பகுதிகளில் நிலவக் கூடும். இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மீன்வர்களுக்கு எச்சரிக்கை: நாளை தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதே போல், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!