சென்னை: சைதாப்பேட்டை பழைய மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டப் பதிவு மையத்தை மா. சுப்பிரமணியன் இன்று (ஜனவரி 12) தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய மா. சுப்பிரமணியன், "கடந்த ஆண்டுகளில் ஒரு குடும்பத்திற்கு ஒரு லட்சம் என்கிற அடிப்படையில் இருந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், தற்போது ஐந்து லட்சம் வரை மருத்துவப் பயன்பெறலாம் என்ற அடிப்படையில் இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
திமுக அரசு பொறுப்பு ஏற்றதிலிருந்து இதுவரை 31 ஆயிரத்து 145 பேர், இந்தத் திட்டத்தின் மூலம் 382 கோடியே ஐந்து லட்சம் ரூபாயிலான மருத்துவப் பயன் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 1600 மருத்துவமனைகளில் மருத்துவக் காப்பீடு மூலம் கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்!
சென்னையில் கரோனா பாதித்தவர்கள் 21 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டுவருகின்றனர். அவர்களுக்கு காணொலி வாயிலாகக் கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எல்லா இடங்களிலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான வசதிகள் உள்ளன.
நான்கு லட்சம் பேரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் 40 ஆயிரம் பேர் மட்டுமே செலுத்தியுள்ளனர். எனவே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள் உடனடியாகச் செலுத்திக்கொள்ள வேண்டும்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 73 விழுக்காடு சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயதிற்குள்டப்பட்டவர்களில் 23 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு முதன்மை மாநிலம் என்கிற நிலையை எட்டியுள்ளது. பொங்கல் பண்டிகை என்பதால், இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது. அடுத்த வாரம் தடுப்பூசி முகாம் நடைபெறும். மெகா தடுப்பூசி முகாம் வரை காத்திருக்காமல் வார நாள்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும்" என்றார்.
திமுக ஆட்சியிலே அரசாணை
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு 2011ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திமுக ஆட்சியில் இருக்கும் அரசாணை வெளியிடப்பட்டது.
ஆனால் தற்போது அதிமுக அரசு தாங்கள்தான் கொண்டுவந்ததாகக் கூறுகிறார்கள். உண்மையிலேயே அதிமுகவால்தான் இது தாமதமானது. அதிமுகவால்தான் 11 மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது எனக் கூறி மார்தட்டிக்கொள்வதில் நியாயம் இல்லை" என்று தெரிவித்தார்.
முன்னதாக மா. சுப்பிரமணியன் பழைய மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தனது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார்.
இதையும் படிங்க: உதவி வேளாண்மை அலுவலர்கள் பணி நியமனம் - ஸ்டாலின் ஆணை வழங்கல்