சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை, சென்னை ஐஐடி மற்றும் ராபர்ட் போஷ் டேட்டா சயின்ஸ் மற்றும் ஏஐ மையம் (RBCDSAI) உடன் கைகோர்த்து, பள்ளி மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் தற்போதுள்ள டிஜிட்டல் கற்றல் தளத்தை மேம்படுத்த முயற்சித்துள்ளது.
இந்த குழுவில் உள்ள ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், மாநிலம் முழுவதும் உள்ள ஆறாயிரம் அரசுப் பள்ளிகளில், 90 லட்சம் மாணவர்களின் கற்றல் தரத்தை மேம்படுத்துவதற்காக, புதிய 'லேர்னிங் மேனேஜ்மென்ட் சிஸ்டம்'-ஐ உருவாக்குவார்கள்.
அவர்கள், தங்களது ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸ் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட மாணவர்களுக்குத் தேவையான மெட்டீரியல்களைப் பகிர்வது, மாணவர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்வது உள்ளிட்டவற்றை மேம்படுத்த வழிகளைக் கொண்டு வருவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயல்திறன் மதிப்பீடு, மோசடி கண்டறிதல், மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்தைக் கண்காணிப்பது - பள்ளிகளை கண்காணிப்பதற்கான டாஷ் போர்டுகள் உள்ளிட்ட பல்வேறு கருவிகளையும் உருவாக்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் கூறும்போது, "திறன் அடிப்படையிலான கற்பித்தல் மற்றும் கற்றலை நோக்கி மாநிலம் நகர்கிறது. சென்னை ஐஐடி உடனான எங்களது இந்த கூட்டு முயற்சி ஒரு முக்கியபடி. இந்த முயற்சியின் மூலம், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வரும் 26ஆம் தேதி முதல் நீட் பயிற்சி