சென்னை: சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழ்நாடு காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக மாநிலம் முழுவதும் காவல் நிலைய அலுவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், சிறப்பு காவல் படை காவலர்கள், தமிழ்நாடு ஊர்க்காவல் படை என சுமார் 75 ஆயிரம் பேர் மீட்புப் பணிக்கு தயார் நிலையில் உள்ளனர்.
இவர்களில் பத்தாயிரம் பேர் விசேஷ உயிர் காக்கும் பயிற்சி எடுத்தவர்கள். 250 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்புப்படை, மீட்புப் படகுகள், மரம் வெட்டும் கருவிகள், சுவர் துளைக்கும் உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். இவர்களில் 3 அணிகள் சென்னை மாநகர காவல்துறையிலும், 1 அணி தஞ்சாவூரிலும், 1 அணி கடலூரிலும் உள்ளன.
சென்னை மாநகராட்சி 15 மண்டலங்களில் 15 சிறப்பு காவல்படை தளவாய்கள் (Commandants) மாநகர ஆணையருக்கு உதவ அனுப்பப்பட உள்ளனர். முதலமைச்சரின் உத்தரவின் பேரில் 14 மூத்த ஐபிஎஸ் அலுவலர்கள் காவல் சரகங்களில் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபடுவார்கள்.
350 கடலோர காவல் படை வீரர்கள் சிறு படகுகளுடன் (Kayak) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களோடு 50 பேர் கொண்ட தன்னார்வ மீனவ இளைஞர்கள் இணைந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
காவல்துறை தலைமை இயக்குநர் தலைமையிலான காவல்துறை தேசிய நீச்சல் மீட்புக் குழு, காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளது.
250 பேர் கொண்ட சிறப்பு அதிரடிப்படை குழுவினர் நீலகிரி மலை சார்ந்த பகுதிகளில் நிலச்சரிவு போன்ற இடர்பாடுகளை சரி செய்ய தயார் நிலையில் உள்ளனர். 10 ஆயிரம் ஊர்க்காவல் படை வீரர்கள் மாநிலம் முழுவதும் காவல் துறையினரோடு இணைந்து செயல்பட தயார் நிலையில் உள்ளனர். 10 மிதவை படகுகள், 364 பேரிடர் மீட்புப் பயிற்சி பெற்ற ஊர்க்காவல் படையினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மக்களே உஷார் - டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை