சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவிற்கு நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்தார். ஒப்புதல் அளித்த உடன் நேற்று இரவே அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தைப் பொதுமக்களிடம் அமல்படுத்துவதற்கான நடவடிக்கையைத் தமிழக அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
முதற்கட்டமாகத் தமிழகக் காவல்துறை சைபர் கிரைம் பிரிவு ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாகச் சட்டத்தின்படி தடை செய்யப்பட வேண்டிய ஆன்லைன் கேம்களின் பட்டியலைத் தயார் செய்து வருகிறது. இந்த ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தின் அடிப்படையில் தடை செய்யப்பட வேண்டிய கேம்களின் செயலி மற்றும் இணையதள நிறுவனங்கள் ஆகியவற்றை கண்டுபிடித்து நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தின் தலைநகரான சென்னை காவல்துறை சைபர் கிரைம் பிரிவிலிருந்து ஆன்லைன் சூதாட்ட கேம்களின் பட்டியலைத் தயாரிக்க ஆரம்பித்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக காவல்துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் சைபர் கிரைம் அதிகாரிகளும் ஆலோசனை மேற்கொண்டு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு அமல்படுத்தும் வகையிலும் விழிப்புண்ர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தொடர்பான திட்டங்களை வகுக்க உள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை விளம்பரப்படுத்தும் விளம்பரங்களையும் தடுக்கும் நடவடிக்கைகளையும் மேலும் ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடுபவர்களைக் கண்டுபிடிப்பதற்கான திட்டத்தையும் காவல்துறை அதிகாரிகள் உருவாக்கி வருகின்றனர். ஆபாச படங்களைப் பார்ப்பவர்களில் குறிப்பாக சிறார்களின் ஐ.பி முகவரியை வைத்து கண்டறிந்தது போல,
தடை செய்யப்பட்டுள்ள ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபடுவார்களைக் கண்டறிவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். படிப்படியாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அமல்படுத்தத் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மோடி ஆட்சியை அகற்ற எதிர்கட்சிகளை ஸ்டாலின் ஒன்று திரட்டுகிறார் - ஆ.ராசா ஆவேசம்