சென்னை: தமிழ்த் திரைப்படமான 'விசாரணை' திரைப்படத்தில் ஆந்திரா போலீசார் தமிழகத்தைச்சேர்ந்த இளைஞர்களை கொடூரமாக தாக்கி குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லக்கூடிய காட்சிகளும், ஜெய்பீம் படத்தில் இருளர் இன மக்களை குற்றத்தை ஒப்புக்கொள்ளக்கூறி கொடூரமாக தாக்குவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றிருக்கும்.
திரைப்படங்களில் பார்ப்பவர்களை கலங்க வைத்த இந்த காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு தாங்கள் துன்புறுத்தப்பட்டதாக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குறவர் இனப்பெண்கள் கண்ணீரோடு தங்களுக்கு நியாயம் வேண்டும் என சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா, மத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புலியாண்டபட்டி கிராமத்தைச் சேர்ந்த குறவர் இன மக்களில் சிலர் நேற்று (ஜூலை 21) சென்னை டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தனர். பின்னர் கண்ணீர் மல்க செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய இளம்பெண், கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி ஆந்திர மாநிலம், சித்தூர் போலீசார் தனது கணவரான வைரமுத்து என்பவரை திருட்டு வழக்கில் தேடி வந்ததாகவும், தனது கணவர் கூலி வேலைக்காக கேரளா சென்றிருப்பதாக போலீசாரிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.
அதனால், தன்னையும் தனது மாமியாரையும் 11-ம் தேதி இரவே சித்தூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று திருடியதை ஒப்புக் கொள்ளுமாறு அடித்து சித்திரவதை செய்ததாகவும், மேலும் தன்னை ஆண் காவலர்கள் நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து ரசித்ததாகவும், திருட்டை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவதாகவும் கூறி மிரட்டியதாகவும் தெரிவித்தார்.
லத்தியால் என் பின்புறத்தில் அடித்தார்கள் என்றும்; நீ என்னுடன் ஒத்துழைத்து இருந்தால் தான் உன் கணவரை உயிரோடு விடுவேன் என மிரட்டியதாகவும், சாதியைப் பற்றி இழிவாக பேசியதாகவும் தெரிவித்தார். இரும்பு ராடு எடுத்து வந்து, அதில் மிளகாய்போடி தூவி, பிறப்புறுப்பில் வைத்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்தனர்.
அவர்கள் செய்த பாலியல் சித்ரவதைகளைத் தாங்க முடியாமல், மரணிக்க முயற்சித்தாகவும், ஆனால் எல்லா நேரமும் பெண் கான்ஸ்டபிள் கூடவே இருந்ததால், தங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்தார். என்ன சம்பவம் என்றே தனக்குத் தெரியாது என அழுத போதிலும் போலீசார் தன்னை அந்தரத்தில் கட்டி தொங்கவிட்டு அடித்ததாகவும், பின் பல போலீசார் தன்னை பிடித்துக் கொள்ள ஆடைகளை அவிழ்த்து பிறப்புறுப்பில் மிளகாய் பொடிகளை தேய்த்து கொடுமைப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
தாங்கள் ஒரு கடையை காட்டுவதாகவும்; அந்த கடையில் தான் நகையை கொடுத்திருக்கிறேன் என்று ஒரு வார்த்தை சொல் விட்டு விடுகிறோம் என்றும்; அப்படி சொன்னால் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட மாட்டோம் எனவும் போலீசார் கூறி 5 நாட்கள் வைத்து அடித்து, கொடுமைப்படுத்தியதால் ஒப்புக் கொண்டதாகவும், பின் தன்னை ஆந்திர சிறையில் அடைத்துவிட்டதாகவும் கண்ணீர் மல்க கூறினார்.
தன்னை மட்டுமல்லாமல் தனது மாமியார், தனது கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் என ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களை இதே போன்று காவல் நிலையம் அழைத்துச்சென்று ஆந்திர போலீசார் நிர்வாணப்படுத்தி அடித்து திருட்டு வழக்குகளை ஒப்புக்கொள்ளுமாறு கொடுமைப்படுத்தியதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
விசாரணை என்ற பெயரில் தங்களுக்கு மோசமான சித்ரவதை மற்றும் பாலியல் தாக்குதல் நடைபெற்றதாக பெண்கள் கூறுகின்றனர். ஐந்து மற்றும் ஏழு வயதே நிரம்பிய தங்களது இரண்டு குழந்தைகள், தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பார்த்து இன்னமும் அச்சம் விலகாமல் இருப்பதாகக் கூறினர்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாரிடம் புகார் கொடுத்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஆந்திர போலீசாருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். தங்களுக்கு எங்கு சென்றும் நீதி கிடைக்கவில்லை என்றும்; தங்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், இரு மாநில காவல்துறை இச்சம்பவத்தில் நம்பிக்கைக்குரிய விதத்தில் செயல்படாத காரணத்தால் இவ்வழக்கின் புலன் விசாரணையை சி.பி.ஐ நேரடியாக விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். ஆந்திர காவலர்கள் சுமார் 20 பேர் மற்றும் இதற்கு துணை போன தமிழ்நாடு காவலர்கள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அவர்களை நிரந்தரப் பணிநீக்கம் செய்து தங்கள் மீது புனையப்பட்டுள்ள பொய்வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்து தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் எனவும் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வேங்கைவயல் வழக்கு: 4 சிறுவர்களிடன் இரத்த மாதிரி சேகரிப்பு... விசாரணை நிலை என்ன?