இதுதொடர்பாக, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா நோய்த் தொற்றினைத் தவிர்க்க, மருத்துவர்களின் ஆலோசனையின்படி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிடும் வகையில், குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வரும் சத்துணவு சிறந்தது என உலகளவிலேயே பல்வேறு தொண்டு நிறுவனங்கள் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிராமங்களில் ஏழை குழந்தைகளின் பெற்றோர் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்து கிராமப் பகுதியிலுள்ள பள்ளிச் சத்துணவு மையங்களில் சுகாதாரத்துடன் குழந்தைகளுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் சத்துணவில் தினமும் சூடான உணவுடன் முட்டை, இஞ்சி, பூண்டு, மிளகு பயன்படுத்துவதால் புரதச் சத்துடன் வைட்டமின் சத்தும் கூடுதலாக கிடைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.
எனவே, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து சத்துணவு வழங்க பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறது. பேரிடர் நேரங்களில் சத்துணவு ஊழியர் சங்கம் மக்களுக்காக பல சமூக சேவைகளில் அரசுக்குத் துணையாக ஈடுபட்டுள்ளோம். பேரிடர் நிவாரண நிதிக்காக சத்துணவு ஊழியர்களின் ஊதியத்தை வழங்கியுள்ளோம்.
தற்போது கரோனா தொற்று அதிகமாய் உருவாகியுள்ள இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு மக்களின் பாதுகாப்புக்காக எடுக்கும் நடவடிக்கைகளில் சத்துணவு ஊழியர்களும் பங்கேற்கத் தயாராக இருக்கின்றோம் என்பதையும், பணிபுரிய அனுமதித்தால் அதற்கான பாதுகாப்பு கவசங்கள், போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுக்கும் சூழ்நிலையில் சத்துணவு வழங்குவதோடு, அரசின் நலத்திட்டங்களையும் அமல்படுத்த சத்துணவு ஊழியர்கள் தயார் நிலையில் இருக்கின்றோம் என்பதையும் கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
பள்ளிக் குழந்தைகளுக்கு தற்போது அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு உணவுப் பொருள்கள் மற்றும் முட்டைகள் 15 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வருவது போல் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து, பள்ளி சத்துணவு மையங்களில் உணவு வழங்க வலியுறுத்தியும், கரோனா பணிகளுக்கு 40 வயதுக்கு மேற்பட்டவர்களை பணிபுரிய கட்டாயப்படுத்துவதை கைவிட வலியுறுத்தியும், அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதினை 58இல் இருந்து 59ஆக உயர்த்தியது போல், ஓய்வு பெறும் வயதைக் குறைந்த ஊதியம் பெறும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கும் 60 வயதாக உயர்த்தி வழங்க வலியுறுத்தியும், முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் ஜூலை 7ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தனிமைப்படுத்தப்பட்ட கணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மனைவி குற்றச்சாட்டு!