சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு இந்தியா முழுவதும் 202 நகரங்களில் 3,858 மையங்களில் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது.
நீட் 2021 நுழைவுத்தேர்வை 15 லட்சத்து 44 ஆயிரத்து 275 மாணவர்கள் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகளை நவம்பர் 1ஆம் தேதி தேசியத் தேர்வு முகமை வெளியிட்டது.
அதில் 8 லட்சத்து 70 ஆயிரத்து 74 பேர் தகுதி பெற்றுள்ளனர். மேலும் தேசியத் தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாணவர்களுக்கான தகுதித் தேர்வை நடத்துவது மட்டுமே தனது பணி எனவும், மாணவர்கள் சேர்க்கையை அந்தந்த கல்வி நிறுவனங்கள் நடத்தும் எனவும் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்றின் காரணமாக கடந்த கல்வியாண்டிலும், நடப்புக் கல்வியாண்டிலும் தேர்வுகள் காலதாமதமாக நடத்தப்பட்டது. இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் மாதத்தில் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள்
கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு நீட் தேர்வு கால தாமதமாக நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில் நடப்புக் கல்வியாண்டிலும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு ஜனவரி 2ஆவது வாரத்துக்கு தள்ளிப்போகிறது.
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு
முன்னேறிய வகுப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு, வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழக்குகள் நிலுவையில் உள்ளதால்,
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தள்ளிப்போகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வுக்கான அறிவிப்பாணை வெளியான உடன், மருத்துவக் கல்வி இயக்குநரகமும் கலந்தாய்வுக்கான அறிவிப்பாணையை வெளியிடுதற்குத் தயார் நிலையில் உள்ளது.
முதுநிலை தொழில் நுட்பப் படிப்பு
முன்னேறிய வகுப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு வழக்கில், அடுத்த விசாரணை ஜனவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அதன் பிறகே அறிவிப்பாணை வெளியாகும்.
வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கினால், அண்ணா பல்கலைக்கழகத்தினால் நடத்தும் முதுநிலை தொழில்நுட்ப படிப்புகளுக்கான கலந்தாய்வும் வழக்கின் தீர்ப்பை எதிர்நோக்கி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒமைக்ரான் தொற்று குறித்து மருத்துவர் பரந்தாமன் விளக்கம்