சென்னை: இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 348 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், தடுப்பு காவலின்போது 1,189 பேருக்கு சித்ரவதைகள் நடந்திருப்பதாகவும் சமீபத்தில் வெளியான புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் அதிகளவிலான லாக்கப் மரணங்கள் நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராம்குமார் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் கடந்த 2012 முதல் 2016ஆம் ஆண்டுவரையில் 157 லாக்கப் மரணங்கள் நடந்திருக்கின்றன. 2019ஆம் ஆண்டு மட்டும் 11 மரணங்கள் என தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த ஸ்வாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் மின்சாரம் தாக்கி புழல் சிறையில் மர்மமான முறையில் இறந்தார். அதுகுறித்த சர்ச்சை இன்றளவும் நீடித்துவருகிறது.
பென்னிக்ஸ், ஜெயராஜ் உயிரிழப்பு
அதேபோல், சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது அனுமதித்த நேரத்தைவிட கூடுதலாக கடை திறந்ததாகக் கூறி பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகிய தந்தை, மகன் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அப்போது காவல் துறையினர் தாக்கியதில் சிறையில் அவர்கள் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் உலுக்கியது.
சிடிவி கேமராக்கள்
சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு காவல் நிலையங்கள், சிறைகள் ஆகிய இடங்களில் பல சீர்த்திருத்தங்களை உச்ச நீதிமன்றம் கொண்டுவந்தது. குறிப்பாக அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் சிறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவேண்டும் என உத்தரவிடப்பட்டது.
லாக்கப் மரணங்கள்
இது ஒருபுறமிருக்க சிறைகளில் 2012 முதல் 2016ஆம் ஆண்டுவரை மட்டுமே 22 கைதிகள் தற்கொலை செய்துகொண்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன. "பொதுமக்களை துன்பறுத்துவதற்கும், தாக்குவதற்கும் யாருக்கும் உரிமை இல்லை என்பதை முதலில் காவல் துறையினர் புரிந்துகொள்ள வேண்டும். சட்டத்தை கையிலெடுப்பதால் மட்டுமே லாக்கப் மரணங்கள் நடக்கிறது” என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி.
காவலர்களின் கட்டளை
"7 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை கிடைக்கக்கூடிய சாதாரண வழக்குகளுக்கு சம்பந்தப்பட்ட நபரை காவல் நிலையம் வரவழைத்து விசாரணை நடத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதை காவல் துறையினர் பின்பற்ற வேண்டும். கைது நடவடிக்கையில் ஈடுபடும்போதும், கைது செய்ததற்கு பின்பும் காவல் துறையினர் பின்பற்றப்பட வேண்டிய கட்டளைகள் என்னென்ன என்பதை காவல் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பதாகைகளாக வைக்க வேண்டும்" எனவும் கூறுகிறார் அவர்.
மொத்த காவல் துறைக்கும் கெட்டபெயர்
"ஒரு சில காவலர்கள் வேலைப் பளு காரணமாகவும், மன அழுத்தம் ஏற்பட்டு செய்யும் தவறினாலும் மொத்த காவல் துறைக்கும் கெட்ட பெயர் ஏற்படுவதாக" வருத்தப்படுகிறார் ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ராஜாராம்.
பயிற்சி அளிக்க வேண்டும்
அதுமட்டுமின்றி, "குற்ற வழக்குகளில் கைதானவர்களை தாக்காமல் விசாரணை நடத்துவது எப்படி? மன அழுத்தம் போக்குவது குறித்தான பயிற்சியை மேற்கொள்வது எப்படி? என்பதை காவல் உயர் அலுவலர்களுக்கு வழங்க வேண்டும்" எனவும் அவர் வலியுறுத்துகிறார்.
காவலர்களின் மன அழுத்தம்
இந்நிலையில் சிறை காவலர்கள் உட்பட அனைத்துத் துறை காவலர்களுக்கும் மன அழுத்தத்தை போக்கும் வகையில் வாரந்தோறும் யோகா உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கிவருவதாகவும், சிறைகளில் கோஷ்டி மோதல்கள் ஏற்படாத வண்ணம் சிறைக் காவலர்கள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
ஆகமொத்தம், காவலர்களின் மன அழுத்தம் அவர்களின் மனிதாபிமானத்தை கொன்றுவிடாமல் பார்த்துக்கொண்டாலே இன்னொரு பென்னிக்ஸ், ஜெயராஜ் பலியாகாமல் தவிர்க்கலாம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இதையும் படிங்க: 75ஆவது விடுதலை நாள்: 75 சாதனை பெண்களின் காபி ஓவியம் - அசத்தும் மாணவி