சென்னை: அரசுத்துறைகளுக்கிடையே தரவு மற்றும் டிஜிட்டல் ஆவணங்களை பாதுகாப்பாக பரிமாற்றம் செய்யும் நம்பிக்கை இணையத்தை தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.
சென்னையில் இயங்கி வரும் தமிழ்நாடு மின்ஆளுமை முகமை அலுவலகத்தில்மின் ஆளுமைக்கான மாநில பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாட்டின் (Blockchain Backbone) நம்பிக்கை இணையம் (NI) "e-Pettagam - Citizen Wallet " – கைபேசி செயலி தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், துறைசார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பயிற்சி மையத்தின் நோக்கம்;மின் ஆளுமைக்கான மாநில பயிற்சி மையம் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் உள் பயிற்சித் தேவைகள் மற்றும் பிற துறை சார்ந்த அலுவலர்களின் மின் ஆளுமை பயிற்சிக்காக, பி.டி.லீ செங்கல்வராயா கட்டிடத்தில் 7வது மாடியில் மின் ஆளுமைக்கான நவீன மாநிலப் பயிற்சி மையம் ஒன்று சுமார் 2750 சதுர அடியில் ரூ. 1.93 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் பணிபுரியும் அலுவலர்களுக்கும் (தலைமையகம் மற்றும் மாவட்டம்) மற்றும் பிற துறை அலுவலர்களுக்கும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை பயிற்சி அளிக்கும்.
பயிற்சி தளங்கள்;
1. மின் அலுவலகப் பயிற்சி
2. G2C சேவைகள் பயிற்சி
3. மின் மாவட்ட மேலாளர்களுக்கானப் (E-DMs) பயிற்சி
4. மென்பொருள் உருவகப்படுத்துதல் பயிற்சி
5. கைபேசி செயலி உருவகப்படுத்துதல் பயிற்சி
6. புவிசார் தகவல் அமைப்பு (GIS) பயிற்சி
7. மின் கொள்முதல் (e-Procurement) பயிற்சி
8. திறன் மேம்பாட்டிற்கு தேவைப்படும் பிற பயிற்சி
இந்த பயிற்சியானது வழக்கமான பயிற்சிகளிலிருந்து மாறுபட்ட கணினி அடிப்படையிலான செய்முறை பயிற்சி ஆகும். செய்முறை பயிற்சி, கணினி அடிப்படையிலான பயிற்சி, பல்முறைப் பயிற்சி (விரிவுரை மற்றும் செயல்முறை) மாவட்டங்களில் முதன்மை பயிற்சியாளர்களுக்கு காணொளி முறையில் பயிற்சி, ஆகிய பயிற்சிகளை மின் ஆளுமைக்கான மாநிலப் பயிற்சி மையம் அளிக்கும்.
மின் ஆளுமைக்கானமாநிலப் பயிற்சி மையத்தின் சிறப்பு அம்சங்கள்; இந்த மையம் இரண்டு வகுப்பறைகளைக் கொண்டுள்ளது, ஒவ்வொரு அறையும் 56 இருக்கைகள் கொண்டுள்ளது. மேலும் பின்வரும் முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. A&B ஆகிய இரண்டு பயிற்சி அரங்குகளும் தனித்தனியான ஒலியமைப்புகளைக் (Audio System) கொண்டுள்ளன.
மேலும் இவ்விரண்டு அரங்குகளையும் ஒன்றாக இணைக்க இயலும். ஒவ்வொரு அரங்கிலும் பங்கேற்பாளர்களுக்கு 98 இன்ச் அளவிலான LED திரை ஒன்றும் 55 இன்ச் அளவிலான 2 திரைகளும் உள்ளன.ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் இலகுவான முறையில் பயிற்சியினை வழங்குவதற்கு 24-இன்ச் தொடுதிரை மற்றும் உயர் நிலை CPU-உடன் கூடிய உயர்நிலை கணினி வழங்கப்பட்டுள்ளது.
பயிற்சியில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பயிற்சிக்காக மடிக்கணினி வழங்கப்படும். எனவே, பயிற்சியாளர் முதன்மைத் திரையில் வழிநடத்தும் போதே, பங்கேற்பாளர்கள் தங்கள் மடிக்கணினிகளில் செய்முறை பயிற்சியை மேற்கொள்ளலாம்.பயிற்சியாளர் மற்றும் பங்கேற்பாளர்கள் கலந்துரையாடவும் தங்களுக்கு எழும் சந்தேகங்களை பயிற்சியாளரிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள பங்கேற்பாளர்களுக்கு மைக்ரோஃபோன் வழங்கப்பட்டுள்ளது.
அதிவேக அலைகற்றை, பயிற்சியின் போது பல பயனர்கள் இணைந்து பணியாற்ற வசதியளிக்கும். இந்த மையம், பயிற்சி மற்றும் திறன் வளர்ப்பு மூலம் மின் ஆளுமையில் ஒரு மாற்றத்தை உருவாக்கும். நம்பிக்கை இணையம் (NI) – Blockchain Backbone நம்பிக்கை இணையம் (NI) என்பது தமிழ்நாடு மாநிலத்திற்காக கட்டப்பட்ட ஒரு நம்பிக்கை இணைய சேவை உள்கட்டமைப்பு ஆகும்.இ-சேவை சான்றிதழ்கள், கல்விச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள், உரிமங்கள், நிலப்பரிவர்த்தனை ஆவணங்கள் மற்றும் தரவுகளைப் பாதுகாக்க இது அரசாங்கத்திற்கு வழிவகுக்கும், மேலும் அவற்றை சேதப்படுத்தாமல் பாதுகாக்கும்.
இ-பெட்டகம் கைபேசி செயலி மூலம், பொதுமக்கள் தங்கள் இ-சேவை சான்றிதழ்கள், கல்விச்சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்களை பாதுகாப்பாகப் பகிரலாம். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்கள் மற்றும் வணிகர்கள் தங்கள் டிஜிட்டல் ஆவணங்களை வேலை வாய்ப்பு, உயர்கல்வி நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பிற அலுவலர்கள் சரிபார்ப்பதற்காக பாதுகாப்பான மற்றும் காகிதமில்லாத முறையில் பகிர்ந்து கொள்ளமுடியும்.
வேலைவாய்ப்பு, கல்விசேர்க்கை, அரசு சேவைகளை அணுகுதல், வெளிநாடுகளுக்கு பயணம் செய்தல் அல்லது பணிபுரிதல் போன்றவற்றிற்கான ஆவணங்களின் அசல் காகித நகல்களை நேரில் சென்று சமர்ப்பிப்பதற்கான தேவையை இது கணிசமாகக் குறைக்கும். அனைத்து சரிபார்ப்புகளும் NI Blockchain வாயிலாக நடைபெற்று, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஆவணங்கள் எந்த வகையிலும் சிதைக்கப்படவில்லை மாற்றப்படவில்லை என்பதை சான்றளிக்கும்.
NI Blockchain அரசுத்துறைகளுக்கிடையே தரவு மற்றும் டிஜிட்டல் ஆவணங்களை பாதுகாப்பாக பரிமாற்றம் செய்ய அனுமதிக்கும் இத்திட்டத்தின் முதற்கட்டமாக, தமிழ்நாடு மின்ஆளுமை முகமை 24 இ-சேவை சான்றிதழ் வகைகளை (சாதிச்சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச்சான்றிதழ், முதல்பட்டதாரிச் சான்றிதழ், முதலியன), கல்விச்சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்களை இ-பெட்டகம் கைபேசி செயலி மூலம் பாதுகாக்கும். இச்செயலி மூலம் மின்னஞ்சல், குறுஞ்செய்தி அல்லது பிறவழிகளில் இந்த ஆவணங்களைப் பாதுகாப்பாகப் பகிர விருப்பமான வழியை குடிமக்கள் தேர்வு செய்யலாம்.
அதனுடன் தமிழ்நாடு அரசின் நிலப்பதிவுத்தரவையும், தமிழ்நாடு மின்ஆளுமை முகமை பாதுகாக்கும். இந்நிகழ்ச்சியில், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளர் ஜெ. குமரகுருபரன், மின் ஆளுமை இயக்குநர், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் முதன்மை செயல் அலுவலர் திரு. பிரவீன் பி. நாயர், இ.ஆ.ப., இணை முதன்மை செயல் அலுவலர், திருமதி பெ.ரமண சரஸ்வதி,இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: சென்னை காலநிலை செயல் திட்ட கையேடு – முதலமைச்சர் ஸ்டாலின் வெளியீடு