சென்னை: ஆப்பிரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் வேகமாகப் பரவி வரக்கூடிய சூழ்நிலையில் அங்கிருந்து தமிழகம் வருபவர்களும், தமிழகத்திலிருந்து அந்நாட்டுக்கு செல்பவர்களும் கட்டாயம் மஞ்சள் காய்ச்சல் தடுப்பு செலுத்திக் கொள்ள வேண்டும் தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்தநிலையில் ஆப்ரேஷன் காவிரி திட்டத்தின் மூலம் சூடானில் இருந்து தமிழர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டு உள்ளனர். அவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தி உள்ளார்கள் என உறுதிப்படுத்த வேண்டும் என அனைத்து விமான நிலையங்களுக்கும் தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாகத் தமிழக சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அங்கிருந்து தமிழர்கள் ஆப்ரேஷன் காவேரி திட்டத்தின் மூலம் தமிழகம் அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என, அது தொடர்பான தரவுகள் சுகாதாரத்துறைக்கு அளிக்குமாறு அனைத்து விமான நிலையங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த தரவுகள் மூலம் மஞ்சள் காய்ச்சலுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களை கண்டறிந்து, ஆறு நாட்கள் தனிமையில் இருக்க நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளுமாறும், அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு இது தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஆப்பிரிக்கா நாடுகளில் வேகமாக இந்த காய்ச்சல் பரவி வருவதால் தமிழகத்தில் இருந்து அங்கு செல்பவர்களும், அங்கிருந்து தமிழகம் வருபவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மூன்று மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு பொதுமக்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்புச் செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும், சூடானில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் - அமைச்சர் நாசர் நீக்கம்!